கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக பாஸ் முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்புடன் தேசிய முன்னணிக்கு தொடர்பில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி மட்டத்தில் பிரதமரின் ஆதரவு குறித்து பாஸ் கட்சி விவாதித்ததா என்பது தனக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரை, இது பாஸ் கட்சியால் முன்மொழியப்பட்ட ஒரு திட்டமாகும். இதற்கும் தேசிய முன்னணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேசிய முன்னணியுடன் பாஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்பது எனக்குத் தெரியாது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் மான், அமைச்சரவையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கைக் வாக்கெடுப்பு முன்மொழிய இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் ஒரு முக்கியமானது அல்ல என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
“இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. நான் இதனை பிரச்சனையாக பார்க்கவில்லை.”
“வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டும், பொருளாதார நிலைத்தன்மை, மேலும் நம்பிக்கைக் கூட்டணி பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தில் என்ன பிரச்சனை?”
“இருப்பினும், இது எங்களுக்கு அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு இல்லை என்று அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.