கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் விசாரணையில் வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கலந்து கொள்வார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சருமான சுரைடா, வாரியம் தம்மீது சுமத்திய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மேலதிக விளக்கங்களை கொடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
“ஒழுக்காற்று செயல்பாட்டில் நாம் எழுதப்பட்ட விளக்கங்களை வழங்கும் ஒரு கட்டம் இருக்க வேண்டும், அதன்பிறகு, (மேலும்) விளக்கங்களை வழங்க ஒரு சந்திப்புக் கூட்டம் இருக்க வேண்டும்.”
“அவர்கள் உறுதியாக தெரியாத மற்றும் முழுமையாக புரிந்து கொள்ளாத சில விஷயங்கள் இருக்கலாம், எனவே அவர்கள் என்னிடமிருந்து மேலும் விளக்கங்களை விரும்புகிறார்கள், மேலும் இது அவர்களுக்கு தெளிவற்ற விஷயங்களை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் தரும்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதியன்று, பிகேஆர் ஒழுக்காற்று வாரியத்திடமிருந்து சுரைடாவுக்கு ஒரு காரணக் கடிதம் வந்தது. அதற்கு அவர் பதிலளிக்க 14 நாட்கள் வழங்கப்பட்டன.
கடந்தாண்டு டிசம்பர் 8-ஆம் தேதி இரவு விருந்தில் அவர் பேசியது மற்றும் பிகேஆர் தேசிய காங்கிரஸில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைத் தொட்டு அந்த கடிதம் வெளியிடப்பட்டது.
கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் விசாரணை செயல்முறைக்கு இடையூறு ஏற்படாதவாறு பிகேஆர் உதவித் தலைவர் பதவியில் இருந்து விடுப்பு எடுப்பதாகவும் சுரைடா கூறியிருந்தார்.