Home One Line P1 மகாதீர், அன்வார் சந்திப்பு – பதவிப் பரிமாற்றம் அடுத்த வாரத்தில் முடிவு

மகாதீர், அன்வார் சந்திப்பு – பதவிப் பரிமாற்றம் அடுத்த வாரத்தில் முடிவு

723
0
SHARE
Ad
மகாதீர்-அன்வார் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) மாலை சந்தித்தபோது…(படம்: நன்றி – அன்வார் இப்ராகிம் டுவிட்டர் பக்கம்)

புத்ரா ஜெயா – மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான பதவிப் பரிமாற்றம் குறித்து பல்வேறு ஆரூடங்களும், ஐயப்பாடுகளும் நிலவி வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) துன் மகாதீரை அவரது அலுவலகத்தில் அன்வார் இப்ராகிம் சந்தித்தார்.

துன் மகாதீர் முழுத் தவணைக்கும் பிரதமராகத் தொடர சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கையெழுத்துகள் பெறப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதிப் படுத்திய அன்வார், இந்த விவகாரம் குறித்தும், பிரதமர் பதவிப் பரிமாற்றம் குறித்தும் மகாதீரிடம் விவாதித்ததாகவும் இன்று மாலையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான பதவிப் பரிமாற்றம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அன்வார் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மகாதீர் முழுத் தவணைக்கும் பிரதமராகத் தொடர, கையெழுத்து பெறும் முயற்சியில் பாஸ் கட்சியும், அம்னோவின் ஒரு குழுவும், பிகேஆர் கட்சியிலிருந்து ஒரு சிலரும் இணைந்து ஈடுபட்டு வருவதாகவும் அன்வார் உறுதிப்படுத்தினார்.

“இந்த விவகாரத்தில் பிரதமர் சம்பந்தப்படவில்லை. அதைவிட முக்கியமாக இன்றைய எனது சந்திப்பின்போது பதவியிலிருந்து விலகி தனக்கு விட்டுத்தரும் தனது முடிவை மகாதீர் மறு உறுதிப்படுத்தினார்” என்றும் குறிப்பிட்ட அன்வார், ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (ஏபெக்) கோலாலம்பூரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அதுவரையில் பிரதமர் மகாதீர் தனது பதவியில் தொடர தனக்கும் உடன்பாடுதான் என்றும் தெரிவித்தார்.

எனினும், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்தில் எடுக்கப்படும் என்றும் அன்வார் கூறியுள்ளார்.

“மிகத் தந்திரமான முறையில் மேற்கொள்ளப்படும் கையெழுத்து வேட்டை போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 7, 2018-இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைத் தற்காக்கும் விதத்தில், 7-வது பிரதமராக மகாதீருக்கும் 8-வது பிரதமராக எனக்கும் ஆதரவு வழங்க நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவமும், மற்ற நண்பர்கள் பலரும் உறுதி பூண்டிருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தைக் குலைக்கும் வகையில் பிகேஆர், ஜசெக, அமானா பெர்சாத்து என எந்தவொரு கூட்டணிக் கட்சியும் நடந்து கொள்ளவில்லை” என்றும் அன்வார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.