கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகும் அமைச்சரவையில் இருக்க விரும்பினால், அதனை தாம் வரவேற்பதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு டாக்டர் மகாதீர் தொடர்ந்து பங்களிக்க உதவும் என்று அவர் கூறினார்.
“நான் இந்த விஷயத்தை நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவிடம் சமர்ப்பிக்கிறேன். இருப்பினும் அவரது பரந்த அனுபவத்தின் அடிப்படையில் நாட்டிற்கு பயனளிக்கும் என்பதால் இந்த யோசனைக்கு நான் முன்மொழிகிறேன்.”
“இது அமைதியான அதிகார மாற்றத்தை ஊக்குவிப்பதோடு, அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தவும் உதவும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிகார மாற்றத்திற்கு முன்பதாக தாம் அமைச்சரவையை தலைமையேற்க திட்டமிடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், பதவி மாற்றம் தொடர்பான பிரச்சனையில் தனக்கோ அல்லது டாக்டர் மகாதீருக்கோ அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.
பதவி மாற்றுவதை விட பொருளாதார நிலைமை அல்லது கொவிட்-19 தொற்று பரவுவது போன்ற பிற விஷயங்களில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய தலைமையை ஒப்படைப்பதற்கான சரியான தேதி குறித்து பேசப்படுமா என்று கேட்டதற்கு, “இல்லை, அத்தேதி குறித்து நாங்கள் கலந்து பேசுவோம் ” என்று அன்வார் கூறினார்.
“ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கு (ஏபெக்) பின்னர் இது நடக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார், எனவே இதை நாங்கள் தீர்ப்போம், யாருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
டாக்டர் மகாதீருக்கு ஆட்சி செய்ய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார், பிரதமரின் நேர்மையை கேள்விக்குட்படுத்த எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.