கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) வெளியிட்ட உரையாடல்கள் பதிவுகள் தொடர்பான விசாரணையில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
காலை 10.45 மணியளவில், தலைமையகத்தின் பின்புற கதவு வழியாக நஜிப் மற்றும் ரோஸ்மா புக்கிட் அமானுக்கு வந்ததை மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
மதியம் 2.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்புக் கழகதிற்கு வருமாறு எம்ஏசிசி நஜிப் மற்றும் ரோஸ்மாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
உயர் குற்றவியல் சதித்திட்டம் குறித்த உரையாடல்கள் பதிவு குறித்த விசாரணையில் உதவ 12 நபர்களின் வாக்குமூலங்களை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ராகிம், முன்னாள் நஜிப் பொதுச்செயலாளர் சுக்ரி முகமட் சல்லே மற்றும் அவரது முன்னாள் சிறப்பு அதிகாரி அம்ஹாரி அபாண்டி நாசருடின் அடங்குவர்.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி, எம்ஏசிசி பல நபர்களின் உரையாடல்களின் ஒலிநாடா பதிவை வெளியிட்டது.