
கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே நடந்த கலவரம் குறித்து தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே உதவித் தலைவர் தியான் சுவா ஒரு சில கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.
“பிகேஆர் அலுவலகத்தில் பொறுமையை இழந்து நபரைத் தாக்கும் ஆதரவாளர்கள் இருப்பதை கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”
“உண்மையான ஆதரவாளர்கள் என்றால் ஒழுக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது உண்மைதான். அவதூறு செய்யாதீர்கள், ஏனெனில் இது அறநெறி கொள்கைகளுக்கு எதிரானது” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இல்லத்தில் கூறினார்.
சில கட்சித் தலைவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் ஆதரவாளர்களுக்கு அவ்வாறு செய்ய உரிமை இல்லை என்று அன்வார் கூறினார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்த விவகாரத்தை கட்சி அதிகாரிகள் மற்றும் ஒழுக்காற்று வாரியத்திடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அன்வார் விளக்கினார்.
நேற்று பிற்பகல், கட்சி ஆதரவாளர்கள், தியான் சுவாவுக்கு எதிராக ‘நாய்’ மற்றும் ‘துரோகி’ உள்ளிட்ட அவதூறான சொற்களை பாவித்து, அவர் மீது தண்ணீர் பாட்டில்களை எறிந்து, வாகனத்திற்குள் நுழைந்தபோது அறைந்தனர்.
இதனிடையே, தியான் சுவாவுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவ பிகேஆர் உறுப்பினரை காவல் துறையினர் நேற்று பிற்பகல் பிகேஆர் தலைமையகம் முன் கைது செய்துள்ளனர்.