ஈப்போ – நாட்டின் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பேராக் மாநிலத்திலும் புதிய மாநில அரசாங்கம் அமைகிறது. பேராக் மாநிலத்தின் அம்னோ தலைவரும் கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினருமான சரானி முகமட் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்படலாம்.
பேராக் மாநிலத்தின் லெங்கோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதி கோத்தா தம்பான் ஆகும்.
பேராக் மாநிலத்தின் தற்போதைய சட்டமன்றத் தொகுதிகள் பின்வருமாறு:
நம்பிக்கைக் கூட்டணி – 30 சட்டமன்றத் தொகுதிகள்
ஜசெக – 18
அமானா – 6
பிகேஆர் – 4
பெர்சாத்து – 2
மொத்தம் – 30 சட்டமன்றத் தொகுதிகள்
தேசிய முன்னணி – பாஸ் கூட்டணி
அம்னோ – 25 சட்டமன்றத் தொகுதிகள்
பாஸ் – 3 சட்டமன்றத் தொகுதிகள்
இந்நிலையில் பெர்சாத்து கட்சி நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் அதன் பலம் தற்போது 28 ஆகக் குறைந்துள்ளது. இதற்கிடையில் பெர்சாத்து கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை தேசிய முன்னணி – பாஸ் கட்சியினருக்கு வழங்கியிருப்பதால் இதன் மூலம் அம்னோ-பாஸ்-பெர்சாத்து இணைந்த கூட்டணியின் பலம் 30 ஆக உயர்ந்திருக்கிறது.
நடப்பு மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு (படம்) பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் இருப்பதால், மொகிதின் யாசின் அமைக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சராகவோ, துணை அமைச்சராகவோ இடம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அகமட் பைசால் தனது பேராக் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவது உறுதியாகிவிட்டது.
அம்னோ தலைவர் சரானி முகமட் மிக அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்னோ அணியின் தலைவராக இருப்பதால் அவருக்கே அடுத்த மந்திரி பெசாராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்படுகிறது.
எனினும், பேராக் சுல்தானிடம், அம்னோ, பாஸ், பெர்சாத்து ஆகிய 3 கட்சிகளும் தலா ஒரு மந்திரி பெசார் வேட்பாளரை முன்மொழிந்து தங்களின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவிருக்கின்றன. அந்த மூவரில் ஒருவரை பேராக்கின் சுல்தான் நஸ்ரின் ஷா அடுத்த மந்திரி பெசாராகத் தேர்ந்தெடுப்பார்.