Home One Line P1 பிகேஆர்: கட்சியை விட்டு வெளியேறிய 12 பேர் கட்சிக்கு 10 மில்லியன் செலுத்த வேண்டும்!

பிகேஆர்: கட்சியை விட்டு வெளியேறிய 12 பேர் கட்சிக்கு 10 மில்லியன் செலுத்த வேண்டும்!

891
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்தில் கட்சியை விட்டு வெளியேறிய 12 பேரை பிகேஆர், நீதிமன்றத்தில் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், அவர்கள் ஒவ்வொருவரும் தலா 10 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் கட்சி பொருளாளர் லீ சீயேன் சுங் தெரிவித்தார்.

மலேசியாகினியிடம் பேசிய அவர், 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் மக்கள் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட சட்ட ஆவணங்களின் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்று கூறினார்.

“நாங்கள் அவர்களுக்கு அடுத்த வாரம் ஒரு கோரிக்கைக் கடிதத்தை அனுப்புவோம். 10 மில்லியன் ரிங்கிட்டை எவ்வாறு செலுத்துவது என்று அவர்கள் பதிலளிக்க வேண்டும்” என்று செமாம்பு சட்டமன்ற உறுப்பினரான லீ கூறினார்.

#TamilSchoolmychoice

“அவ்வாறு செய்யத் தவறினால், நாங்கள் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம். அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பிய பின்னர் அதை அறிவிக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவோம்” என்று அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் நீக்கப்பட்டால், வேறொரு கட்சிக்குத் தாவினால் அல்லது கட்சியை விட்டு வெளியேறி, சுயேட்சை வேட்பாளராக நீடித்தால் பிகேஆர் கட்சிக்கு 10 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டியிருக்கும் என்று அந்த சட்ட ஆவணத்தில் இடம் பெற்றுள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

மக்களின் பிரதிநிதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அல்லது வெளியேற்றப்பட்ட ஏழு நாட்களுக்குள் அக்கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பிரதிநிதிகளில், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஸ்மின் அலி (கோம்பாக்), சுரைடா கமாருடின் (அம்பாங்), சைபுடின் அப்துல்லா (இண்டெரா மக்கோத்தா), கமாருடின் ஜாபார் (பண்டார் துன் ரசாக்), மன்சோர் ஒத்மான் (நிபோங் தெபால்), ராஷீட் ஹஸ்னான் (பத்து பாஹாட்), சந்தாரா குமார் (செகாமாட்) , அலி பிஜு (சராதோக்) மற்றும் வில்லி மோங்கின் (புஞ்சாக் போர்னியோ) ஆகியோர் அடங்குவர்.

மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான ஹில்மான் இட்ஹாம் (கோம்பாக் செத்தியா) , முகமட் ஜெய்லானி காமிஸ் (ரெம்பியா), மற்றும் ஜோகூரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் சோங் பேட் புள் ஆகியோர் இந்த சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர்.