Home உலகம் இரஷியாவின் ஜியார்ஜியாவையும், தமிழகத்தின் கோபாலபுரத்தையும் இணைத்த சொல் ‘ஸ்டாலின்’

இரஷியாவின் ஜியார்ஜியாவையும், தமிழகத்தின் கோபாலபுரத்தையும் இணைத்த சொல் ‘ஸ்டாலின்’

891
0
SHARE
Ad

(இன்று மார்ச் 5, இரஷியாவின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவு நாள். 1953-ஆம் ஆண்டு தனது 74-வது வயதில் காலமானார் ஜோசப் ஸ்டாலின். அதனை முன்னிட்டு அவரை நினைவு கூரும் வகையில் மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)

மு.க. முத்து பிறந்த பின் பத்மா அம்மையார் மறையவே, தயாளு அம்மாளை மணம் முடித்த கலைஞர் மு.கருணாநிதி, தனது இரண்டாவது மகனுக்கு ‘பகுத்தறிவுத் தீம்பிழம்பு’ பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாக அழகிரி என்று பெயர் சூட்டினார். 1953-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது மகனை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தந்தை பெரியாரின் பெயரையும் பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் இணைத்து ‘அய்யாதுரை’ என்று பெயர் சூட்டக் கலைஞர் பெரிதும் நினைத்திருந்தார்.

அந்த மூன்றாவது மகன் பிறக்க இருந்த வேளையில், சோசலிச மண்டலமான சோவியத் ரஷிய ஒன்றியத்திலிருந்து பொதுவுடைமை சித்தாந்த தலைவர் ஜோசப் ஸ்டாலின், தலையில் இரத்த நாளம் வெடித்து மருத்துவமனை அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டு மயக்க நிலையில் இருப்பதாக மார்ச் முதல் நாள் தகவல் வருகிறது. தொடர்ந்து மூன்றாவது மகன் பிறந்த தகவலும் எட்டவே, அய்யாதுரைக்குப் பதிலாக ஸ்டாலின் என்று மூன்றாவது மகனுக்கு பெயர் சூட்டினார் கலைஞர்.

அந்த ஸ்டாலின்தான் இன்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்; இந்திய நாடாளுமன்றத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து திமுக-விற்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத் தந்த சாதனைத் தலைவர்; கருணாநிதிக்குப் பின்னர் திமுகவின் தலைமையை ஏற்று அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடத் தயாராகி வருகிறார். அந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், அடுத்த தமிழகத்தின் முதல்வராகவும் பதவியேற்பார் ஸ்டாலின்.

#TamilSchoolmychoice

1953-ஆம் ஆண்டில் மார்ச் மாதத் தொடக்கத்தில் இரத்தக்குழாய் வெடித்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினோ ஐந்து நாட்கள் உயிருக்குப்போராடி, மயக்க நிலையில் இருந்து மீளாமலேயே மார்ச் 5-ஆம் நாள் மரணத்தைத் தழுவினார்.

சோவியத் சோசலிச ஒன்றியக் குடியரசை உருவாக்கியதில் முதல் பங்கு லெனினுடையது என்றால் அடுத்த பங்கு ஸ்டாலினுடையது. வீர-தீரமிக்க செஞ்சேனைப் படையை உருவாக்கியதிலும் அதிரடி முடிவுகளை எடுப்பதிலும் எதிரிகளை நடுநடுங்க வைப்பதிலும் குன்றம்போல நிமிர்ந்து நின்ற ஸ்டாலினைக் கண்டு அஞ்சியவர்கள் எல்லாம் அவரின் மறைவுக்குப் பின் தூற்றத் தொடங்கினர்.

உலக வரலாற்றில் இப்படியும் எண்ணற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. உலகெங்கும் பரவியிருக்கும் பௌத்த சமயத்தை உருவாக்கிய புத்தர் மறைந்த பின் ஒரு கூட்டம் அவரைத் தூற்றியது. அதனால்தான் புத்த மதம் இந்தியாவில் வேர் கொள்ளவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

ஜோசப் ஸ்டாலினின் மறைந்த பின் அரசியல் மற்றும் பொருளியல் அடிப்படையில் முதலாளித்துவம் அவரைத் தூற்றியது. ஸ்டாலின் என்ற ஒருவர் பிறந்திருக்காவிடில் பொதுவுடைமைக் கொள்கையின் தொடர்ச்சி இரஷியாவில் நிகழ்ந்திருக்காது.

ஜியார்ஜியாவில் பிறந்து 74 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் ஜோசப் ஸ்டாலினின் புகழ் எந்நாளும் இம்மண்ணில் நிலை கொண்டிருக்கும். அந்த மாமனிதனுக்கு மார்ச் 05, நினைவு நாள் ஆகும்.

-நக்கீரன்