Home One Line P1 தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரமூட்டும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்!

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரமூட்டும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம்!

974
0
SHARE
Ad

(இன்று மார்ச் 13, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மலேசிய எழுத்தாளர் நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)

டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு(கூட்டுறவு சங்கம்) தலைவர் என்பதாலும் அதைச் செம்மையாக வழிநடத்துவதுடன், நாட்டிலேயே எடுத்துக்காட்டான வகையில் கூட்டுறவு சங்கத்தை நிறுவியுள்ளதாலும் அவரைக் ‘கூட்டுறவுக் காவலர்’ என்று அழைப்பது மலேசிய இந்திய சமூகத்தில் வழக்காக இருக்கிறது.

ஆனாலும் அவரை மொழிக்காவலர் என்றும் தமிழிலக்கியக் காவலர் என்றும் அழைப்பதுகூட இன்னும் சாலச் சிறந்ததாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

#TamilSchoolmychoice

காரணம், இந்த நாட்டில் தமிழ் எழுத்தாளர்களை, குறிப்பாக வளரும் எழுத்தாளர்களை, அதனிலும் குறிப்பாக மாணவ எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியப் பரிசளிப்பு விழாவை தனது வழிகாட்டுதலில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் நடத்தி வருகிறார் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா.

சிறுகதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை என்னும் உரை வீச்சு, கட்டுரை உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ் ஆர்வலர்களையும் மாணவர்களையும் எழுத உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான ரிங்கிட் செலவில் விழா நடத்துவதற்கு ஏதுவாக மொழி அறவாரியத்தைத் தோற்றுவித்த தொலைநோக்குப் பார்வையாளர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா.

அதுமட்டும் அல்லாமல், தமிழ் எழுத்தாளர்கள் உலக அளவில் உற்சாகம் பெறும் வண்ணம் பன்னாட்டுப் புத்தகப் பரிசை நடத்தி, பத்தாயிரம் ரிங்கிட் டாலர் பணப் பரிசை ஈராண்டுகளுக்கு ஒரு முறை அளித்து, அதன்வழி புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய தாகத்தையும் தணித்துவரும் பெருமையை டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியம் தன்னகத்தேக் கொண்டுள்ளது.

இதில், வெளிநாட்டு படைப்பாளிகள் பரிசு பெறும் வேளையில் உள்நாட்டுப் படைப்பாளர்கள் மனம் சோர்ந்து விடக்கூடாதென்பதற்காக, பன்னாட்டு புத்தகப் பரிசுத் திட்டத்துடன் உள்நாட்டு புத்தகப் பரிசளிப்புத் திட்டத்தையும் ஒருசேர அறிவித்து, இதன்மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பன்னாட்டுப் புத்தகப் பரிசுப் போட்டியில் பங்கு கொள்ளும் அதேவேளை, உள்நாட்டு புத்தகப் பரிசுப் போட்டியிலும் கலந்து கொள்ளும் இரட்டை வாய்ப்பை அளித்து மலையகத் தமிழ் எழுத்தாளர்களை பல வகையாலும் ஊக்குவித்து வருகிறார் சோமா.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், பன்னாட்டுப் பிரிவு, உள்நாட்டுப் பிரிவு இரண்டிலும் மலேசிய எழுத்தாளர்களே வெற்றி பெற்று பத்தாயிரம் டாலர் பரிசையும், மலேசிய ரிங்கிட்டிலான பரிசுத் தொகைகளையும் அள்ளிச் சென்றனர்.

சரி! இது போன்ற மொழி, இலக்கியப் போட்டிகளால் ஒரு கூட்டுறவு சங்கமான தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்திற்கு என்ன நன்மை?

ஒரு நடவடிக்கையின் அல்லது செயலின் நன்மைகள் எப்போதுமே நேரடியாகக் கிடைப்பதில்லை; இலக்கியம் என்பது காலக் கண்ணாடி. இத்தகைய போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழ் படைப்புகள், மலேசியத் தமிழர்களின் தற்கால சமூக-அரசியல்-பொருளியல் கூறுகளை வெளிப்படுத்தி, அதை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் தமிழ்த் தொண்டை ஆற்றும் மன நிறைவு ஒன்றுதான் இத்தகைய மொழி, இலக்கியப் பணிகளின் மூலம், கூட்டுறவு சங்கமும், அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமாவும் நமது இந்திய சமுதாயத்திற்கு வழங்கும் நன்மைகளாகும்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐந்தாவது பன்னாட்டு புத்தகப் பரிசளிப்பும் உள்நாட்டு புத்தகப் பரிசளிப்பும் நடைபெற உள்ளது.

இத்தகைய தமிழ்த் தொண்டை இடையறாது ஆற்றி வரும் கே.ஆர்.சோமசுந்தரம் ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை ஏற்படுத்தும் பணிக்காக ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

இவ்வாறெல்லாம் உள்நாட்டு அளவிலும் உலக அளவிலும் தமிழ்த் தொண்டாற்றி வரும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் நீடூழி வாழ தமிழன்னை துணை நிற்க வேண்டும் என்று அவரது பிறந்த நாளில் (மார்ச் 13) மலேசியத் தமிழர்கள் அனைவரின் சார்பிலும், செல்லியல் குழுமத்தின் சார்பிலும் வாழ்த்துவோம்.

-நக்கீரன்