கோலாலம்பூர்: இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் மோசமான கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, விஸ்மா புத்ரா இத்தாலியில் உள்ள 323 மலேசியர்களையும், ஈரானில் இருந்து 55 பேரையும் திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன், இரு நாடுகளில் உள்ள அனைத்து மலேசியர்களின் இருப்பிடங்களை அடையாளம் காண்பதுடன், அவர்கள் மலேசிய தூதரகங்களில் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“எங்கள் பிரதிநிதிகள் அவர்களை மீண்டும் கொண்டுவருவதற்கான பணிக்கான துல்லியமான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை முக்கியம்” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் தெரிவித்தார்.
இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் உள்ள மலேசியர்களிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“விஸ்மா புத்ரா உள்ளிட்ட அரசாங்கம் தன்னால் முடிந்த உதவியைச் செய்யும். முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்குள்ள எங்கள் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதுதான். அனைவரும் சீராக இருக்க பிரார்த்தனை செய்வோம்,” என்று அவர் கூறினார்.
மார்ச் 13-ஆம் தேதி, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், இத்தாலி மற்றும் ஈரானில் உள்ள மலேசியர்களை சிறப்பு பணிகள் மூலம் அரசாங்கம் திரும்ப அழைத்து வருவதாக அறிவித்தார்.