கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை நள்ளிரவு, மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த இருந்த போது, பொதுப் போக்குவரத்து நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மக்களின் கூட்டம் கூடும் இடமாக மாறியது.
தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பி அவர்கள் காவல் நிலையத்தில் அனுமதி பெற இவ்வாறு கூடியுள்ளனர்.
மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை இந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், பொது மக்கள் காவல் நிலையங்கள் மற்றும் பல பொது போக்குவரத்து நிலயங்களில் கூட்டம் கூட்டமாக நின்றது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
கடந்த திங்களன்று தொற்று நோயைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 மற்றும் காவல் துறை சட்டம் 1967 ஆகியவற்றின் கீழ் இயக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து இந்த போக்கு மக்களிடத்தில் பெரிதும் காணப்பட்டது.
இருப்பினும், நெரிசல் மற்றும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக கூடினால் கொவிட்-19 பரவும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் சமூக ஊடகங்களில் இம்மாதிரியான புகைப்படங்களைப் பார்க்கும் போது, மக்கள் இன்னும் பாதுகாப்பு அம்சத்தை முக்கியமாக கருதாதது தெரிய வருகிறது.
இருப்பினும், நேற்று நள்ளிரவுக்குள், காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தற்காலிகமாக வெளியூர்களுக்குச் செல்லும் அனுமதி பாரத்தை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை என்று கூறி அந்த நடைமுறையை ஒத்திவைத்திருந்தார்.