கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை இங்குள்ள எம்ஆர்ஆர் 2 சாலையில் காவல் துறையின் சாலை தடுப்பின் போது இரண்டு நண்பர்களுடன் பயணித்தக் கார் காவல் துறை தடுப்பை மோதியதில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 2 மணியளவில், சந்தேக நபர் பெரோடுவா அல்சா காரில் பயணித்ததாகவும், சாலைத் தடையை மீறி, கோலாலம்பூர்-காராக் அதிவேக நெடுஞ்சாலை நோக்கி தப்பிச் சென்றதாகவும் கோம்பாக் காவல்துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறினார்.
“வாகனம் கோம்பாக் டோல் பிளாசாவில் கட்டுப்பாட்டை மீறி டோல் தடுப்பை மோதி பெந்தோங் நோக்கி வேகமாகச் சென்றது.”
“கி.மீ 23.6-இல், கார் மீண்டும் கட்டுப்பாட்டை மீறி, பெந்தோங்கில் சாலை தடுப்பு ஒன்றில் மோதியது. மூன்று சந்தேக நபர்களும் தப்பிச் சென்று அருகிலுள்ள காட்டில் கால்நடையாக தப்பிச் சென்றனர்,” என்று அவர் திங்கள்கிழமை இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
21 வயதான சந்தேகநபர்களில் ஒருவர், மாலை 5 மணியளவில் ஓல்ட் கிளேங் சாலையில் கைது செய்யப்பட்டார். மேலும் குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 20 முந்தைய குற்றப் பதிவுகள் அவர் மீது இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு சந்தேக நபர்களையும் காவல் துறை தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 மற்றும் பிரிவு 279 , தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988-இன் பிரிவு 22 (பி) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.