கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை மாலை 4.35 மணியளவில் 76 வயது நபர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கொவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அந்நபர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவராவார். பின்னர் கொவிட்-19 தொற்று காரணமாக கிளந்தான், கோலகிராய் சுல்தான் பெத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தத் தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சு தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மலேசியாவில் இன்று புதன்கிழமையுடன் 172 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் இதைத் தொடர்ந்து மொத்தமாக 1,796 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த புதிய எண்ணிக்கையில் 71 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இன்று 16 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்தது.