கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர், பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் வாயிலாக 800 ரிங்கிட் உதவி நிதியைப் (பிபிஎன்) பெற தகுதியுடையவறாகிறார் என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
இது உள்நாட்டு வருமான வரித்துறை இணையதளத்தில் மலேசியாகினியின் தேடலின் அடிப்படையில் கண்டறியப்பட்டதாக அது தெரிவித்தது. ரோஸ்மா பண உதவி பெறுவதை “தேர்ச்சி பெற்றது” என்பதை அந்த இணையத்தளம் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப்புக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை.
நீதிமன்ற ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட இத்தம்பதியரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் சிலர் இணையத்தில் சரிபார்த்து இந்த விசயத்தை எழுப்பினர்.
ஆயினும், நேற்றிரவு 11.50 மணிக்கு மீண்டும் சரிபார்த்த போது ரோஸ்மாவின் பெயரில் இந்த உதவித் தொகை குறித்து “பதிவு இல்லை” என்பதைக் குறித்ததாக அது தெரிவித்தது.
பிபிஎன் அமைப்பில் தகுதியற்ற நபர்கள் இன்னும் அத்தகைய உதவிகளைப் பெறுவதாகவும், அதே நேரத்தில் தகுதியுள்ளவர்களுக்கு பண உதவி பெறும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலும் தாங்கள் “தேர்ச்சி பெறவில்லை” என்ற அறிவிப்பைப் பெறுவதாகவும் ஓரியண்டல் டெய்லி கூறியதாக அது பதிவிட்டுள்ளது.