ஈரான், ஏப்ரல் 10-செவ்வாய்க்கிழமை மிகவும் சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்று தெற்கு ஈரானைத் தாக்கியுள்ளது. இதில் 37 பொது மக்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி மரணமடைந்திருப்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
850 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 6.3 ரிக்டர் ஸ்கேலில் இப்பூகம்பம் தாக்கியுள்ள போதும் நிலநடுக்கம் தாக்கிய இடத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கே புஷெஹ்ர் எனும் நகரில் அமைந்துள்ள அணு உலை இதில் சேதமடையவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.
இப்பூகம்பத்தை அடுத்து பல சிறிய அதிர்வுடைய சில நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் சர்வதேச அணு சக்தி ஏஜன்ஸியான IAEA இற்கு ஈரான் அறிவுறுத்தியுள்ள படி இப் பூமி அதிர்வினால் தனது அணு உலை சேதமடையவோ அல்லது கதிர்வீச்சு கசிவு ஏற்படவோ இல்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது. எனினும் ஈரானின் IRNA ஊடகம் தெரிவித்த செய்திகளின் படி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த காக்கி நகரில் கடும் சேதம் ஏற்பட்டுக் கட்டடங்கள் பல உடைந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கொர்மௌஜ், டாயெர் மற்றும் கங்கன் ஆகிய நகரங்களும் ஷான்பே, ஷானா ஆகிய கிராமங்களும் கடும் சேதத்தைச் சந்தித்திருந்ததுடன் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மக்கள் புதையுண்டதாகவும் கூறப்படுகின்றது.
தற்போது பாதிப்புற்ற பகுதிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தின் 5 குழுக்களும் அம்புலன்ஸ் வண்டிகளும் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதேவேளை இந்த பூகம்பத்தின் பாதிப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளான பஹ்ரெயின், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளும் சிறிதளவு உணர்ந்துள்ளன. இந்நிலையில் ஈரான் தனது மண்ணில் மேலதிக அணுச்செறிவூட்டல் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாக சர்வதேசம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.