இலங்கை, ஏப்ரல் 10- தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.
இந்நிலையில், தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்’ என்று மேலும் கூறியுள்ளார்.