கோலாலம்பூர்: பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க உயர் கல்வி அமைச்சகம் அது குறித்தான இயக்க நடைமுறையை சுகாதார அமைச்சகத்துடன் விவாதிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
சுமார் 100,000 மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்புவது ஒரே நேரத்தில் நிகழாமல் பார்த்துக் கொள்ள இந்த இயக்க நடைமுறை முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். இதனால் அதிகப்படியான பொதுமக்கள் இயக்கங்களைத் தவிர்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் இது குறித்து விவாதித்தோம். நாங்கள் அவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியும். இருப்பினும், ஒரு கட்டுப்பாடான இயக்க நடைமுறையை விரும்புகிறோம். வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பு அவர்கள் சுகாதார பரிசோதனை செய்ய வேண்டும், நாம் செய்ய இருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான மலேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.