கோலாலம்பூர்: செலாயங்கில் அமைந்துள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நான்கு நாட்கள் துப்புரவு மற்றும் கிருமிநாசினிப் பணிகளை முடித்த பின்னர் மீண்டும் அது செயல்பட்டு வருவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவ்விற்பனை மையத்தின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார். இதனால், இப்பகுதியில் வணிகர்கள், தொழிலாளர்கள் மத்தியில் கொவிட்-19 பாதிப்பதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றுவார்கள் என்று அவர் கூறினார்.
கூடுதலாக, விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் போன்ற பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அட்டவணைப்படி நுழைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“அவர்கள் விதிகளுக்கு இணங்க வேண்டும். அவை தோல்வியுற்றால், நாங்கள் மொத்த சந்தையை மூடுவோம்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.