Home One Line P2 டி.எஸ்.திருமூர்த்தி : இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி பதவியில் சிறக்க வாழ்த்துகள்

டி.எஸ்.திருமூர்த்தி : இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி பதவியில் சிறக்க வாழ்த்துகள்

982
0
SHARE
Ad
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் திருமூர்த்தி – கோப்புப் படம்

(இந்திய அரசாங்கத்தின் சார்பில் நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான நிரந்தர பிரதிநிதியாக மலேசியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு அவர் இந்தியத் தூதராகப் பணியாற்றிய கால கட்டத்தின் சில நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் அடுத்தடுத்து நமது நாட்டுக்கான இந்தியத் தூதர்களாக பல சிறந்த மனிதர்கள், திறனாளர்கள் அந்தப் பதவியை அலங்கரித்து வந்திருக்கின்றனர்.

பல்வேறு நிகழ்ச்சிகள், திட்டங்கள் மூலம் பல இந்தியத் தூதர்கள் உள்நாட்டு இந்திய அரசியல், சமூக அமைப்புகளுடன் அணுக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பல நினைவில் நிற்கும் பணிகளை ஆற்றியிருக்கின்றனர்,

#TamilSchoolmychoice

உதாரணமாக, பல ஆண்டுகளுக்கு முன்னரே சாட்வால் என்ற இந்தியத் தூதர் தலைநகர் செந்துலில் இயங்கும் முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு நேரடியாக வருகை தந்து இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏராளமான நூல்களை  அன்பளிப்பாக வழங்கினார்.

எனினும், பெரும்பான்மையாகத் தமிழர்களைப் கொண்ட மலேசியாவில் தமிழர் ஒருவர் இந்தியத் தூதராக நியமிக்கப்பட வேண்டும் என்ற மலேசிய தமிழர் அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றன.

முதன் முறையாக மலேசியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட தமிழர்  திருமூர்த்தி. 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற அவர் 4 பிப்ரவரி 2018 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

அவரது பதவிக் காலத்தில் இந்தியத் தூதரகம் பலமுனைகளிலும் சுறுசுறுப்புடன் இயங்கியது. இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றவுடன் உடனடியாக அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காட்டும் வண்ணம் கண்காட்சி ஒன்றை நடத்தினார்.

இந்தியத் திரைப்படத்துறை, பாரம்பரியம், இந்திய மின்னிலக்க (டிஜிடல்) துறை என பல அம்சங்களை எடுத்துக் காட்டும் பிரம்மாண்டமான கண்காட்சியும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன.

2015-இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட யோகா தினத்தை மலேசியாவிலும் பரவலாக நடத்தி யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்பட பாடுபட்டார். யோகா குறித்த பல நிகழ்ச்சிகள் நடத்தினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்திற்கு மலேசியாவும் ஒரு களமாக இருந்த வரலாற்று சம்பவங்களை நினைவுகூர்ந்து இந்திய தேசிய இராணுவத்தின் முன்னாள் வீரர்களை அழைத்து கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

அவரது பதவிக் காலத்தில்தான் இந்திய குடிநுழைவு (விசா) அனுமதிகளும், ஓசிஐ எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான நிரந்தர குடிநுழைவு அனுமதிகளும் பன்மடங்காக மாற்றங்களும், வளர்ச்சிகளும் கண்டன.

நரேந்திர மோடியின் மலேசிய வருகையின்போது…முன்னாள் அமைச்சர் டாக்டர் சுப்ரா, திருமூர்த்தி…

2015-இல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை மிகச் சிறப்பாகக் கையாண்டார் திருமூர்த்தி. வெறும் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புகளோடு நிறுத்தி விடாமல், மோடி மக்களுடன் மக்களாக கலந்து கொள்ளும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை நடத்தியதில் திருமூர்த்திக்கும் முக்கிய பங்கிருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியத் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளிலும், தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களிலும் இந்தியத் தூதர் நேரடியாகக் கலந்து கொள்ளும்  அரிய காட்சிகளும் அவரது பதவிக் காலத்தில்தான் அரங்கேறின.

அத்தகைய நிகழ்ச்சிகளில் அனைவரிடத்திலும் தமிழிலேயே உரையாடுவார்.

மலேசியத் தமிழ் நூல்கள் இந்திய அரசாங்க அளவில் தகுந்த அங்கீகாரம் பெற தன்னால் இயன்ற முயற்சிகளில் ஈடுபட்டவர் அவர் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்.

வைகோவுக்கு உணவு வழங்க முன்வந்தவர்

மதிமுக தலைவர் வைகோ மலேசியாவுக்கு வந்தபோது குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்திலேயே முடங்கிக் கிடந்தபோது அவரைத் தொடர்பு கொண்டு “வீட்டிலிருந்து உணவு தயாரித்து உங்களுக்கு அனுப்பட்டுமா?” என்று கேட்ட மனிதாபிமானமும் கொண்டவர் திருமூர்த்தி. இந்த சம்பவத்தை வைகோவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்தியத் தூதராக கோலாலம்பூரில் இருந்த காலகட்டத்தில் செல்லியல் ஊடகத்தின் செய்திகளையும் பின்தொடர்ந்தவர். நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது செல்லியல் குறித்த செய்திகள் குறித்தும், செல்லியல் தொழில் நுட்ப ரீதியில் மேற்கொள்ளும் நவீன மேம்பாடுகள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

அவரது துணைவியார் கௌரி திருமூர்த்தி புகழ்பெற்ற தமிழ் நாட்டு டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் புதல்வியாவார்.

1985-ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அதிகாரியாக தேர்வு பெற்று இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கிய திருமூர்த்தி பல்வேறு நாடுகளில் இந்தியத் தூதரகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இந்தியத் தூதராக மலேசியாவில் பணியாற்றிய பின்னர் புதுடில்லி திரும்பிய அவர் இந்திய வெளியுறவு அமைச்சில் பொருளாதாரப் பிரிவுக்கான செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பலருக்குத் தெரியாத இன்னொரு முகத்தையும் திருமூர்த்தி கொண்டிருந்தார். அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதுதான் அது. இதுவரையில் கீழ்க்காணும் 3 ஆங்கில நூல்களை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

Kissing the Heavens: The Kailash – Manasarovar Yatra (1999)

Clive Avenue (2002)

Chennaivaasi (2012)   

இந்தியாவுக்கான ஐநா நிரந்தரப் பிரதிநிதியாக நியூயார்க்கில் திருமூர்த்தி பொறுப்பேற்பார் என்ற இந்திய வெளியறவுத் துறையின் அறிவிப்பு அவரது திறன்களுக்கும் சேவைகளுக்கும் கிடைத்திருக்கும் மற்றொரு அங்கீகாரமாகும்.

தனது புதிய பதவியில் திருமூர்த்தி சிறந்த பணிகளை ஆற்றி, வெற்றி பெற செல்லியல் குழுமத்தின் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இரா.முத்தரசன்