கண்டஹார் : ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக் கொள்ளப்படுவர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கும், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான தலிபான்களுக்கும் இடையில் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தென் ஆப்கானிஸ்தானிலுள்ள பல நகரங்களை தலிபான்கள் கட்டம் கட்டமாகக் கைப்பற்றி வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஆகக் கடைசியாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி கண்டஹாரை நோக்கிச் செல்லும் சாலைகளில் அமைந்துள்ள காவல் முகாம்களை தலிபான்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.
சில இடங்களில் ஆப்கானிஸ்தானின் இராணுவத்தினரே தலிபான்களிடம் சரண்டைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், கண்டஹாரில் செயல்படும் இந்தியத் துணைத் தூதரகத்தில் இருந்து சுமார் 50 தூதரக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் கண்டஹாரை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும் அடுத்த சில நாட்களில் அவர்கள் கண்டஹாரைக் கைப்பற்றக் கூடும் என்ற தகவல்கள் வெளிவந்திருப்பதைத் தொடர்ந்தும் இந்திய வெளியுறவு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக வெளியேறினாலும், அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தைப் பாதுகாக்க சுமார் 150 இராணுவ வீரர்கள் தொடர்ந்து பணியில் அமர்த்தப்பட்டிருப்பர் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இந்தியாவைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளும் தங்களின் தூதரகங்களை மூடிவிட்டு வெளியேறத் தயாராகி வருகின்றன என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.