Home இந்தியா அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார் – கொங்கு நாட்டை மையப்படுத்தி தமிழக அரசியல்

அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார் – கொங்கு நாட்டை மையப்படுத்தி தமிழக அரசியல்

554
0
SHARE
Ad

சென்னை : பல கட்சிகளில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் வரிசையாக திமுகவில் அண்மைய சில நாட்களாக இணைந்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அண்மையில் மகேந்திரன், பத்மப்ரியா உள்ளிட்ட பலர் விலகி தி.மு.க-வில் இணைந்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் (படம்) தனது ஆதரவாளர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) தி.மு.க-வில் இணைந்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டவர் தோப்பு வெங்கடாசலம்.

பெருந்துறை என்பது ஈரோடு (கோயம்புத்தூர்) வட்டாரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.

அண்மையச் சில நாட்களாக தமிழக அரசியல் களம் கொங்கு நாடு வட்டாரத்தையே முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

ம.நீ.ம கட்சியின் மகேந்திரன் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகேந்திரன் முன்பே இணைந்திருந்தால் சட்டமன்றத் தேர்தலில் திமுக கோவை மாவட்டத்தில் மேலும் கூடுதலாக வாக்குகளைப் பெற்று, கூடுதல் கொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணைய அமைச்சராக நியிமக்கப்பட்டார். இவர் தாராபுரம் என்ற சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர். இதுவும் கோவை மாவட்டத்தில் இருக்கும் தொகுதியாகும்.

முருகனின் நியமனத்தைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்.

இன்று திமுகவில் இணைந்திருக்கும் தோப்பு வெங்கடாசலமும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் முக்கியத்துவம் கொடுத்து திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார் என்ற கருத்து நிலவுகிறது.

ஆகக் கடைசியாக வந்த தகவல்களின்படி கொங்கு வட்டாரத்தை அப்படியே தமிழகத்திலிருந்து பிரித்து புதுச்சேரி போன்று புதிய மாநிலமாக – யூனியன் பிரதேசமாக – மத்திய அரசாங்கத்தின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.