இந்த நிகழ்ச்சிக்கு உமா பதிப்பகம் இணை ஆதரவு வழங்கியிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி இன்று தொடங்குவதற்கு முன்னர் நமது நாட்டின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் (படம்) முன்னுரையாக வழங்கிய வாழ்த்து, காணொளி வடிவில் ஒளிபரப்பானது.
ஏற்பாட்டாளர்களின் இந்த சிறந்த, அரிய முயற்சியைப் பாராட்டிய முத்து நெடுமாறன் மாணவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கு பெற்று தங்களின் திறனை வெளிப்படுத்துவதற்கு சிறந்த களமாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது எனவும் பாராட்டு தெரிவித்தார்.
“தமிழ் மொழியை மாறிவரும் நவீனத் தொழில்நுட்ப முன்னெடுப்புகளில் தடைகளின்றி சிறப்பாக பயணம் செய்ய வைக்க வேண்டும் என எங்களைப் போன்றவர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் எடுத்த முயற்சிகளின் பலன்களை நேர்படப் பேசு போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக நேரடியாகக் கண்டு வருகிறோம். உலகம் முழுவதையும் பாதித்திருக்கும் தொற்று நோயால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடுகளால் நான் அனைவரும் இல்லங்களில் முடங்கிக் கிடக்கிறோம். எனினும் பல அரிய பணிகளை இல்லங்களில் இருந்தபடி, தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக நேர்படப் பேசு நிகழ்ச்சி திகழ்கிறது” என்றும் முத்து நெடுமாறன் தனதுரையில் பாராட்டினார்.
“தற்போதுள்ள சூழ்நிலை மேலும் ஓரிரு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்ற கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் கூறப்பட்டிருக்கின்றன. எனவே, இதுபோன்ற இயங்கலை போட்டிகள் மாணவர்களின் மொழித் திறன்களையும் வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்” என்றும் முத்து நெடுமாறன் மேலும் கூறினார்.
மொழித் திறன் என்பது மிகவும் முக்கியம், ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதை விட பல மொழிகளைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் பல துறைகளிலும் சிறநவர்களாக உருவெடுக்கிறார்கள் என்பதையும் தனதுரையில் வலியுறுத்தினார் முத்து நெடுமாறன்.
“தமிழ் அழகான, ஆழமான மொழி. தமிழில் அடிப்படைத் திறன் இருந்தால் பன்முகத் திறன்களை வளர்த்துக் கொள்ள வல்லமை தரும் மொழி. அந்த வகையில் மாணவர்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் தமிழ் மொழித் திறனை வளர்த்துக் கொள்ளவும் தொழில் நுட்பத்தின் மூலம் நேர்படப் பேசு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும், அதற்குத் துணை நின்ற அனைவருக்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் முத்து நெடுமாறன் நேர்படப் பேசு நிகழ்ச்சிக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று ஒளியேறிய நேர்படப் பேசு நிகழ்ச்சியை கீழ்க்காணும் இணைப்பின் மூலம் யூடியூப் தளத்தில் கண்டு மகிழலாம்: