Home நாடு மலேசிய இந்தியர்களின் வரலாற்று நாயகன் துன் சம்பந்தன்

மலேசிய இந்தியர்களின் வரலாற்று நாயகன் துன் சம்பந்தன்

2446
0
SHARE
Ad

(இன்று மே 18, அமரர் துன் சம்பந்தனின் நாற்பத்து ஒன்றாவது நினைவு நாள் ஆகும். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

மலேசிய அரசியல் வானில் ஒளிர்ந்தவரும் பொது வாழ்வில் மிளிர்ந்தவருமான துன் வீ. தி. சம்பந்தனுக்கு இன்று 41-ஆவது நினைவு நாள்!

செல்வந்தராக அரசியலில் ஈடுபட்டு, அரசியலில் சொந்த சுயநலனுக்காக செல்வம் சேர்க்காமல், அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்கிய ஒரே மலேசிய இந்தியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தனார்தான். அன்னார் இந்த உலக வாழ்வைத் துறந்த நாள், இந்நாள்!

#TamilSchoolmychoice

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் ஏறக்குறைய உலகம் முழுமையிலும் அரசியல் மறுமலர்ச்சியும் ஜனநாயக எழுச்சியும் ஏற்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் அரசியல் என்பது, மக்களுக்கு தொண்டாற்றுவதற்குரிய ஒரு தளமாக.. ஒரு பாட்டையாகக் கருதப்பட்டது. இப்பொழுதெல்லாம் நிலைமை அடியோடு மாறிவிட்டது. நாடு விடுதலை அடைந்த காலத்தில் மலேசிய இந்திய சமூகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இலாத் தலைவராக அரசியல் வானில் பளிச்சிட்ட வீராசாமி  திருஞான சம்பந்தன், ‘துன்’ பட்டம் பெற்ற முதல் மலையகத் தமிழர்.

துன் சம்பந்தன், துங்கு அப்துல் ரகுமான்

கடல் கடந்து பட்டம் பெற்றாலும் பண்பாட்டைக் கடன் பெறாத இந்தத் தலைவர், வெள்ளை வேட்டியுடன் இலண்டன் மாநகரில் நடைப் பயின்றவர். இன நல அடிப்படையில் நோக்குங்கால், மலேசியத் தமிழர்களுக்கு கிட்ட வேண்டிய சில அரிய வாய்ப்புகளையும், பொருளாதார அடிப்படையில் கூட நல்ல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டதாக சமுதாயத்தில் சில குறைகூறல்கள் இருந்தாலும் தன் அரசியல் பயணத்தில் எவருக்கும் தீங்கிழைக்காத, சுயநலம் பாராத அப்பழுக்கற்ற பாதையைக் கொண்டிருந்த தலைவர் துன் சம்பந்தனார்.

மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினராக தமிழ் மக்கள் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒரே அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரசில் (மஇகா) ஒரு தமிழர் தலைவராக முடியவில்லையே என்ற அந்நாளைய ஏக்கத்தைத் தணித்தவர் துன்; அதைப்போல, மஇகா-வில் தமிழ் மொழி பயன்பாட்டில் இடம்பெற முதன்முதலில் வழி வகுத்தவரும் இவரே.

சுதந்திர மலேசியாவின் ஆட்சித் தலைமை இருக்கையிலும் அமர்ந்து பெருமை சேர்த்த சம்பந்தன், வெள்ளி மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி-செங்கம்மாள் இணையரின் இரண்டாவது மகனாகத் தோன்றியவர்.

இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன்வழி தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய சம்பந்தன், சுங்கை சிப்புட் நகரில் சொந்த செலவில் தமிழ்ப் பள்ளியை நிறுவியவராவார். மஇகா வரலாற்றில், சொந்தமாக தமிழ்ப் பள்ளியைக் கட்டிய ஒரேத் தலைவர் துன் சம்பந்தனார் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

நாட்டின் விடுதலைக்கான ஒப்பந்தத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து பிரிட்டனுக்கு வேட்டி-சட்டையுடன் சென்று கையொப்பமிட்ட துன் சம்பந்தன், தன் வாழ்க்கையில் அரசியல் உச்சத்தைத் தொட்டபோதும்கூட எளிமையின் சின்னமாக விளங்கினார்.

பத்திரிகையாளராகவும் இருந்த துன் சம்பந்தன்

எல்லாவற்றுக்கும் மேலாக, துன் சம்பந்தன் ஒரு நல்ல பத்திரிகையாளர் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

‘மலைநாடு’ என்ற தமிழ் நாளேட்டையும் ‘மலாயன் டைம்ஸ்’ என்ற ஆங்கில தினசரியையும் நடத்தியப் பெருமைக்குரியவர் துன். இதனால், பெரு நட்டத்தைக் கண்டபோதும், அதைக் கருதாது பத்திரிகைத் தாகத்தில் அவர் திளைத்திருந்தார்.

அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட சுதந்திர மலேசியாவில் இன்று தமிழனின் தன்மானச் சின்னமாகத் திகழும் அடையாளங்களுள் ‘துன் சம்பந்தன் மாளிகை’-யும் ஒன்று. நாடு விடுதலைப் பெற்ற பின்னர், தோட்டத் துண்டாடலால் வேலை வாய்ப்பு பிரச்னையை எதிர்கொண்ட மலையகத் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு தோட்டங்களை வாங்க முனைந்த துன் சம்பந்தன், மலேசிய இந்திய சமுதாயத்தின் உதவியுடன் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். அவரது அந்த முயற்சியின் வடிவம்தான் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். அச்சங்கத்தின் தலைமையகக் கட்டடம்தான் துன் சம்பந்தன் மாளிகை.

மலேசியாவில் துன் சம்பந்தனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

வாழ்க மலேசியா! வளர்க துன் சம்பந்தனின் புகழ்!

-நக்கீரன்