கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் இனியும் நீடிக்கவில்லை என சங்கப் பதிவிலாகா அறிவித்திருப்பதை மகாதீர் மறுத்திருக்கிறார்.
“நானே இன்னும் பெர்சாத்து கட்சியின் தலைவர்” என்றும் மகாதீர் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
மே 5 தேதியிட்ட கடிதத்தின்வழி மகாதீர் தனது தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார், இப்போது மொகிதின் யாசின்தான் இடைக்காலத் தலைவர் என சங்கப் பதிவிலாகா தெரிவித்திருந்தது.
இதன் தொடர்பில் விரிவான பதில் விளக்கக் கடிதம் ஒன்றை தனது வழக்கறிஞர் ஹானிப் கத்ரி வாயிலாக சங்கப் பதிவிலாகாவுக்கு மகாதீர் எழுதியிருக்கிறார்.
தனக்கு ஆதரவான டத்தோ மார்சுகி யாஹ்யா, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அவருக்குப் பதிலாக ஹம்சா சைனுடின் நியமிக்கப்பட்டது, மொகிதின் யாசினின் இடைக்காலத் தலைவர் பதவி நியமனம் போன்ற விவகாரங்களும் சட்டப்படி செல்லாது, அதனையும் விசாரிக்க வேண்டும் என மகாதீர் சங்கப் பதிவிலாகாவுக்குத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து மகாதீரின் வழக்கறிஞர் ஹானிப் கத்ரியும் சட்ட விளக்கங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
“பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிப்ரவரி 24-ஆம் தேதி மகாதீர் பதவி விலகல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ஆனால், அவ்வாறு கடிதம் மூலம் பதவி விலகுவதுதான் இறுதியானது என பெர்சாத்து சட்டவிதிகள் தெரிவிக்கவில்லை. மேலும் அந்தக் கடிதத்தை பெர்சாத்து கட்சி நிராகரித்து விட்டது. எனவே, மகாதீரே இன்னும் பெர்சாத்து தலைவராக நீடிக்கிறார்” என ஹானிப் கத்ரி கூறினார்.
“மே 17-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆறு கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் மொகிதின் கட்சியின் தலைவர் (பிரெசிடெண்ட்) என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெர்சாத்து இடைக்காலத் தலைவர் எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, மகாதீரின் பதவி விலகலை பெர்சாத்து கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்றும் ஹானிப் கத்ரி மேலும் விளக்கினார்.
மேலும் ஏப்ரல் 1-ஆம் தேதி மகாதீர் பெர்சாத்து கட்சியின் தலைவராக ஏகமனதாக வெற்றி பெற்றார் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஹானிப் சுட்டிக் காட்டினார்.
மொகிதின் யாசினும், முக்ரிஸ் மகாதீரும் பிரெசிடெண்ட் என்ற பதவிக்கே போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தனர் என்பதையும் ஹானிப் குறிப்பிட்டார்.
சங்கப் பதிவிலாகாவில் தனது கடிதம் நேற்று புதன்கிழமை பிற்பகலில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஹானிப் கத்ரி தெரிவித்தார்.