கோலாலம்பூர்: ஜூன் 9- க்குப் பிறகு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறும் செய்தியை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்தார்.
“இது போலியான செய்தி. அதை நம்ப வேண்டாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடந்த கொவிட்19 தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சரியான தகவல்களை தேசிய பாதுகாப்பு மன்றம் வலைத்தளத்திலிருந்து பெறுமாறு இஸ்மாயில் சப்ரி பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
அரசின் செயல்பாடுகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் அங்கு உள்ளன என்று அவர் கூறினார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிவுக்கு வர திட்டமிடப்பட்டிருந்த ஜூன் 9- க்குப் பிறகு, மாநிலங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படுமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு தற்காப்பு அமைச்சர் பதிலளித்தார்.
மாநிலங்களுக்கு இடையிலான பயணம் உட்பட அனைத்து தொடர்புடைய நடைமுறைகளும் ஜூன் 9-க்குப் பின்னர் அரசாங்கம் முடிவு செய்யும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.