கோலாலம்பூர் – வாகன உற்பத்தி நிறுவனமான யு.எம்.டபிள்யூ (UMW Holdings) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பட்ருல் பெய்சால் அப்துல் ரஹிம் (படம்) தனது 51-வது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) திடீரெனக் காலமானார்.
அவர் மாரடைப்பால் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தில் உடனடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
2010-ஆம் ஆண்டில் உயர்நிலை நிர்வாகியாக யு.எம்.டபிள்யூ நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பட்ருல் பெய்சால், பின்னர் 2015-இல் அந்நிறுவனத்தின் தலைவராகவும் குழும தலைமைச் செயல் அதிகாரியுமாக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக கசானா நேஷனல், புரோட்டோன், லோட்டஸ், போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளை பட்ருல் பெய்சால் வகித்திருக்கிறார்.
யு.எம்.டபிள்யூ நிறுவனம் வாகன விற்பனை உரிமம், கனரக இயந்திரங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், கப்பல் இயந்திரங்கள் போன்றவைகளின் தயாரிப்புகளைக் கொண்ட பல்வகை வணிகங்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனமாகும்.
கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான யு.எம்.டபிள்யூ இன்று 2.09 ரிங்கிட் என்ற அளவில் பரிமாற்றம் கண்டது. அதன் மொத்த சந்தை மதிப்பு 2.44 பில்லியன் ரிங்கிட்டாகும்.