கோலாலம்பூர்: தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்), மே மாதத்திற்கான நீர் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக உள்ள காரணத்தை விளக்கி உள்ளது. இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாத நீர் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டதால் என்று அது தெரிவித்துள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள், மதிப்பிடப்பட்ட வாசிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்று ஸ்பான் கூறியது, ஏனெனில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் நீர் விநியோகக் கட்டண வாசிப்பை மேற்கொள்ள முடியவில்லை என்று அது கூறியிருந்தது.
“மே மாதத்தில் நீர் விநியோகக் கட்டண வாசிப்புக்குப் பிறகு, மே கட்டணத்திற்கான கணக்கீடு மார்ச் மற்றும் ஏப்ரல் கட்டணங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
“கூடுதலாக, உள்நாட்டு பயனீட்டாளர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வீட்டில் தினசரி நடவடிக்கைகள் அதிகம் உள்ளபடியால், வழக்கத்தை விட அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இது நீர் கட்டணம் அதிகரிக்க பங்களித்தது.” என்று ஸ்பான் கூறியது.
பயனர்கள் அந்தந்த நீர் கட்டணங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், திருத்தம் செய்யப்பட்ட அடுத்த மாதம் கட்டணத்தில் பதிவு செய்யப்படும் என்றும் அது கூறியுள்ளது.