கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தனது கட்சி 15- வது பொதுத் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று இரவு தனது வீட்டிற்கு வருகை தந்த பின்னர் இந்த முடிவு வெளிப்படுத்தப்பட்டது.
“நாங்கள் 15-வது பொதுத் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அனைவரும் எங்களுடன் தயாரா?” என்று அவர் இன்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிக்கை தற்போதைய அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் எழுந்துள்ளது. நம்பிக்கைக் கூட்டணி, டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் வாரிசான் ஆகியோர் தேசிய கூட்டணியிடம் இருந்து அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
ஜிபிஎஸ் ஆதரவுடன் அம்னோ, தேசிய முன்னணி மற்றும் பாஸ் உடன் புதிய கூட்டாணி உருவாக்கி மொகிதின் யாசின் ஆட்சியில் அமர்ந்தார்.
மொகிதினுக்கு எதிராக நம்பிக்கைக் கூட்டணி அல்லது அம்னோ-பாஸ் நகர்ந்தால் தேர்தல் நடக்கக்கூடும்.
மொகிதின் பெரும்பான்மையை இழந்தால், மாமன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புக் கொள்ளாவிட்டால் அவர் பதவி விலக வேண்டி வரும்.
இப்போது பெர்சாத்துவில் மொகிதினின் தலைமையை எதிர்க்கும் மகாதீர், நம்பிக்கைக் கூட்டணிக்கு திரும்பாவிட்டால் கட்சி வரும் பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
அம்னோ மற்றும் பாஸ் பெர்சாத்து போட்டியிடுவதற்கான இடத்தை நிச்சயமாக விட்டுக்கொடுக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.