Home One Line P2 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லையா?

5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை இல்லையா?

619
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் செல்பேசித் தொடர்புத் துறையில் அடுத்த கட்ட தொழில்நுட்பப் பாய்ச்சலாகக் கருதப்படுவது 5-ஜி தொழில் நுட்பமாகும்.

மலேசியாவுக்கான இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு, 5 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சைபுடின் அப்துல்லா நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

சைபுடின் அப்துல்லா தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சராவார்.

#TamilSchoolmychoice

இந்த 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. வெளிப்படைத் தன்மை இல்லாமல் அந்த ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் பாஹ்மி பாட்சில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிகேஆர் கட்சியின் தொடர்புத் துறை இயக்குநரான பாஹ்மி, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

“700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. திறந்த குத்தகை முறையில் பரிசீலித்து வழங்கப்படவில்லை. இந்த 5 நிறுவனங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன?” என்றும் பாஹ்மி கேள்வி எழுப்பினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் பின்பற்றிய வெளிப்படைத் தன்மையும் பகிரங்க குத்தகை முறைகளும் தற்போது பின்பற்றப்படுவதில்லை என்றும் பாஹ்மி குற்றம் சாட்டினார்.

இந்த 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கொண்டுதான் 5-ஜி தொழில்நுட்ப அமுலாக்கம் செயல்வடிவம் காணவிருக்கிறது என்பதையும் பாஹ்மி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆட்சியில் இருக்கும் தேசியக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குத்தகை இல்லாமல் 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தை அமைச்சர் சைபுடின் விளக்க வேண்டும் என்றும் பாஹ்மி அறைகூவல் விடுத்திருக்கிறார்.

அல்காடெல், செல்கோம் அக்சியாத்தா பெர்ஹாட், டிஜி டெலிகொம்யுனிகேஷன்ஸ், மேக்சிஸ் புரோட்பேண்ட், டெலிகோம் மலேசியா ஆகியவையே அலைக்கற்றை ஒதுக்கப்பட்ட அந்த 5 நிறுவனங்கள் ஆகும்.

5-ஜி அமுலாக்கத்தில் இந்த நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வளவு கட்டணைங்களை விதிக்கும் என்பது போன்ற விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் என்றும் பாஹ்மி கேட்டுக் கொண்டார்.