Home One Line P2 5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

919
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவுக்கான 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு, 5 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சைபுடின் அப்துல்லா (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அறிவித்திருந்தார்.

இந்த ஒதுக்கீடுகள் வெளிப்படைத்தன்மை இன்றி, பகிரங்க குத்தகை முறையில் அல்லாமல் ஒதுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்சிலும் இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சைபுடின் அப்துல்லா இன்று புதன்கிழமை (ஜூன் 3) இந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார்.

மலேசியாவில் செல்பேசித் தொடர்புத் துறையில் அடுத்த கட்ட தொழில்நுட்பப் பாய்ச்சலாகக் கருதப்படுவது 5-ஜி தொழில் நுட்பமாகும்.

“700 மெகாஹெர்ட்ஸ், 900 மெகாஹெர்ட்ஸ், 2,600 மெகாஹெர்ட்ஸ் அளவுகளைக் கொண்ட அலைக்கற்றைகளை நிறுவனங்கள் பெறுவதற்கான 18 ஆவணங்கள் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டன. தொழில்நுட்ப, சட்ட சிக்கல் காரணங்களுக்காக மலேசிய தொடர்பு பல்ஊடக ஆணையம் வெளியிட்ட உத்தரவை உடனடியாக இரத்து செய்திருக்கிறேன்.  வெளிப்படைத் தன்மையையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் அந்த ஆவணங்களை பரிசீலனை செய்யவிருக்கிறேன்” என சைபுடின் அப்துல்லா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாஹ்மி பாட்சிலின் கேள்விகள்

இந்த 5-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கொண்டுதான் 5-ஜி தொழில்நுட்ப அமுலாக்கம் செயல்வடிவம் காணவிருக்கிறது என்பதையும் பாஹ்மி (படம்) சுட்டிக் காட்டியிருந்தார்.

வெளிப்படைத் தன்மை இல்லாமல் அந்த ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று பாஹ்மி பாட்சில் குற்றம் சாட்டியிருந்தார். பிகேஆர் கட்சியின் தொடர்புத் துறை இயக்குநரான பாஹ்மி, லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

“700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. திறந்த குத்தகை முறையில் பரிசீலித்து வழங்கப்படவில்லை. இந்த 5 நிறுவனங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன?” என்றும் பாஹ்மி கேள்வி எழுப்பியிருந்தார்.

700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் உத்தரவில் சைபுடின் அப்துல்லாவே கையெழுத்திட்டிருந்தார்.

இந்த விவகாரத்தை அமைச்சர் சைபுடின் விளக்க வேண்டும் என்றும் பாஹ்மி அறைகூவல் விடுத்திருந்தார்.

அல்காடெல், செல்கோம் அக்சியாத்தா பெர்ஹாட், டிஜி டெலிகொம்யுனிகேஷன்ஸ், மேக்சிஸ் புரோட்பேண்ட், டெலிகோம் மலேசியா ஆகியவையே அலைக்கற்றை ஒதுக்கப்பட்ட 5 நிறுவனங்கள் ஆகும்.

இதில் அல்காடெல் தொலைத் தொடர்பு நிறுவனம் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் ரீதியாக வலுவான தொடர்புகளைக் கொண்ட சைட் மொக்தார் அல்-புக்காரி இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

“பகிரங்க குத்தகைக்கு விட இருந்தோம்” – கோபிந்த் சிங் டியோ

இதற்கிடையில் அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தைத் தரக் கூடிய இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான குத்தகைகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கவிருந்தோம் என முன்னாள் தொடர்பு பல்ஊடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ (படம்) தெரிவித்திருக்கிறார்.

அவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில்தான் நாடு தழுவிய அளவில் மின்னிழை உருமாற்றத் (பைபர்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தனது முகநூலின் கோபிந்த் சிங் டியோ தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார்.

700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு திறந்த குத்தகை முறையில் வழங்கப்படும் என மலேசிய தொடர்பு, பல்ஊடக ஆணையத்தின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் கோபிந்த் சிங் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆட்சியில் இருக்கும் தேசியக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்நிலையில், அலைக்கற்றை ஒதுக்கீடு குத்தகை இல்லாமல் 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

எனினும் தற்போது அந்த ஒதுக்கீடுகள் இரத்து செய்யப்பட்டிருப்பது சைபுடின் அப்துல்லா மீதான மதிப்பைக் கூட்டியிருக்கிறது. மக்களின் கண்டனங்களுக்கு அரசாங்கம் செவிசாய்க்கிறது என்பது போற்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.