கோலாலம்பூர் : நாட்டின் வாகன உற்பத்தி நிறுவனமான பெரோடுவா (Perusahaan Otomobil Kedua Sdn Bhd) தனது வாகன விலைகளை 3 முதல் 6 விழுக்காடு வரையில் குறைக்கவிருக்கிறது.
எதிர்வரும் ஜூன் 14 வரை இந்த விலைக் குறைப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. காப்புறுதி (இன்சூரன்ஸ்) கட்டணங்கள் இந்த விலைக் குறைப்பில் அடங்காது.
வாகனங்களின் விலையில் ரொக்க விலைக் குறைப்பாக இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சில சலுகைகள் வழங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து முழுமையான வாகனங்களாக உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விற்பனை வரியில் 50 விழுக்காடு தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. உள்நாட்டிலேயே உபரி பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் உள்நாட்டு வாகனங்களுக்கு 100 விழுக்காடு தள்ளுபடி விற்பனை வரியில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதி வரையில் இந்த வரிச் சலுகை நீடிக்கும்.
பிரதமரின் அறிவிப்பை வரவேற்ற பெரொடுவா அதைத் தொடர்ந்தே ரொக்க விலை கழிவு சலுகைகளை அறிவித்திருக்கிறது.
2020-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 52,920 வாகனங்களை பெரோடுவா விற்பனை செய்தது. நாட்டில் இந்த காலகட்டத்தில் மொத்தம் 129,401 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன்படி பெரோடுவா வாகனங்கள் 41 விழுக்காட்டு விற்பனை சந்தையைக் கைப்பற்றியிருக்கிறது.
தற்போது தயாரித்து விற்கப்படும் அனைத்து பெரோடுவா வாகனங்களும் 90 விழுக்காடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபரி பாகங்களைக் கொண்டிருக்கின்றன. மலேசியத் தயாரிப்பாளர்களிடமிருந்து 5.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உபரி பாகங்களை பெரோடுவா கடந்த ஆண்டில் வாங்கியிருந்தது.
உற்பத்தி எண்ணிக்கை அளவில் மலேசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக பெரோடுவா திகழ்கிறது.