Home One Line P1 பாஸ் இந்தியர் ஆதரவாளர் பிரிவுத் தலைவர் என்.பாலசுப்பிரமணியம் செனட்டராக நியமனம்

பாஸ் இந்தியர் ஆதரவாளர் பிரிவுத் தலைவர் என்.பாலசுப்பிரமணியம் செனட்டராக நியமனம்

999
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாஸ் கட்சியின் இந்தியர் ஆதரவு பிரிவு தலைவராக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த என்.பாலசுப்பிரமணியம் செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்.

பாலசுப்பிரமணியத்தின் நியமனத்தின் மூலம் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் பாஸ் கட்சியின் ஆதிக்கமும் செல்வாக்கும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி மலாய்-முஸ்லீம் சமூகத்தினரை மட்டும் குறிவைக்காமல் மற்ற இனங்களையும் குறிவைத்து தனது அரசியல் ஆதரவுக் களத்தை விரிவாக்க முனைந்திருக்கிறது என்பதையே பாலசுப்பிரமணியத்தின் செனட்டர் நியமனம் எடுத்துக் காட்டுகிறது.

வழக்கமான தேசிய முன்னணி ஆட்சியில் மஇகா சார்பிலான செனட்டர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்.

தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் மூலம் சில சமயங்களில் இந்தியர்கள் செனட்டர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

உதாரணமாக, மைபிபிபி கட்சியின் வாயிலாக டான்ஸ்ரீ கேவியஸ், டத்தோ டி.முருகையா ஆகியோரும் அவர்களுக்குப் பின்னர் டத்தோ லோகபாலன், மெக்லின் டி குருஸ் போன்ற சில தலைவர்களும் செனட்டர்களாகப் பதவி வகித்தனர்.

ஒருமுறை கெராக்கான் கட்சியின் சார்பில் டத்தோ கோகிலன் பிள்ளை செனட்டராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியின் மூலம் துணையமைச்சராகவும் செயல்பட்டார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை பொன்.வேதமூர்த்தி செனட்டராகவும் அதைத் தொடர்ந்து துணையமைச்சராகவும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் நியமிக்கப்பட்டார். தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் மூலம் அல்லாமல் நேரடியாக அரசாங்கத்தால் நியமிக்கட்ட முதல் இந்திய செனட்டராக அப்போது வேதமூர்த்தி கருதப்பட்டார்.

அதன் பின்னர் தேசிய முன்னணி அரசாங்கத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர் செனட்டர், துணையமைச்சர் பதவிகளில் இருந்து விலகினார்.

பின்னர் மீண்டும், துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் செனட்டராக நியமிக்கப்பட்ட வேதமூர்த்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இன்னும் அவர் செனட்டராகத் தொடர்கிறார்.

தற்போது மைபிபிபி, கெராக்கான் இரு கட்சிகளுமே தேசிய முன்னணியில் இருந்து விலகி விட்டன.

மஇகா தேசிய முன்னணியின் வழி தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும், அந்தக் கட்சிக்கு செனட்டர் பதவிகள் நியமனம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜூன் 22-ஆம் மேலும் நான்கு பேர் செனட்டர்களாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அந்த நால்வர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

அந்த நால்வரில் மஇகாவின் பிரதிநிதிகள் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு நிறைவுக்கு வருகிறது.

அவருக்குப் பதிலாக மஇகா பிரதிநிதி ஒருவர் செனட்டராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.