கோலாலம்பூர் – பிரதமர் அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் சரவணன் தெரிவித்தார்.
இந்த வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் அனைத்து மலேசியர்கள் மட்டுமின்றி, இந்திய சமூகத்தினரும் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும் எனவும் சரவணன் கூறினார்.
கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு தலா 600 ரிங்கிட் உதவித்தொகையை அரசாங்கம் வழங்குகிறது.
அதேபோன்று 40 வயது வரையிலான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அவர்களை 800 ரிங்கிட் உதவித் தொகையை அரசாங்கம் வழங்குகிறது.
40 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் போது ஒரு நபருக்கு தலா ஆயிரம் ரிங்கிட் அரசாங்கம் வழங்குகின்றது. உடற்பேறு குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்தும்போதும் தலா 1,000 ரிங்கிட் உதவித் தொகையை நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்குகிறது.
இதன்மூலம் அதிகமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டிருக்கிறது என சரவணன் கூறினார்.
அதே வேளையில் மனிதவள மேம்பாட்டு நிதியின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களைக் கூடுதல் திறன் கொண்டவர்களாக உருவாக்கி அவர்களுக்கான வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மனிதவள அமைச்சு முனைப்புடன் செயல்படுகிறது.
இதனையும் குறிப்பாக இந்திய சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென சரவணன் கேட்டுக்கொண்டார்