வாஷிங்டன் – எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை தொடங்கப் போவதாக அறிவித்திருந்த டொனால்ட் டிரம்ப் அதற்கான தேதியை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார். பரவலான சர்ச்சைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப் அந்த முடிவை எடுத்திருக்கிறார்.
ஜூன் 19 அமெரிக்காவில் விடுமுறை நாளாகும். கறுப்பின அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாளாக அந்நாள் கொண்டாடப்படுகிறது. அந்நாளுக்கு மதிப்பு தரும் விதத்தில் தனது பரப்புரையை அந்நாளில் தொடங்கும் முடிவை மாற்றிக் கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.
அவரது பரப்புரை சனிக்கிழமை ஜூன் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் டிரம்ப் முன்பு நிர்ணயித்த இதே ஜூன் 19-ஆம் தேதியில்தான் அமெரிக்காவில் அடிமை நடைமுறை ஒழிக்கப்பட்டது.
மேலும் டிரம்ப் தனது பரப்புரையைத் தொடங்கவிருக்கும் இடம் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள துல்சா என்ற இடமாகும். இந்த இடத்தில் நூறாண்டுக்கு முன்னர், 1921-ஆம் ஆண்டில் ஓர் இனக் கலவரத்தில் நூற்றுக் கணக்கான கறுப்பினத்தினர் கொல்லப்பட்டனர். அப்போது வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின மக்களை நோக்கியும், அவர்களின் வணிகங்களை நோக்கியும் தாக்குதல் தொடுத்ததில் நூற்றுக் கணக்கானோர் மரணமடைந்தனர்.
அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான இனக் கலவரமாக அந்த சம்பவம் விவரிக்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் அத்தகைய ஓர் இடத்தையும், தேதியையும் டிரம்ப் தேர்ந்தெடுத்ததுதான் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது.
அமெரிக்கா முழுவதும் ஜோர்ஜ் புளோய்ட் என்ற கறுப்பின நபர் காவல் துறையினரின் கரங்களில் மரணமடைந்தது தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் கொழுந்து விட்டு எரிகின்றன.
அந்தத் தேதியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடமும் கொண்டாட்டத்திற்குரியவை என டிரம்ப் அறிவித்திருக்கிறார். அதனால்தான் அன்றைய தினத்தைத் தேர்வு செய்ததாக டிரம்ப் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஜனநாயகக் கட்சி சார்பில் டிரம்பை எதிர்த்துக் களம் காணவிருக்கும் ஜோ பிடன் மீதான செல்வாக்கு அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜோ பிடன் தனது துணையதிபர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்வுக்கான போட்டியில் குதித்த பெண் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அநேகமாக துணையதிபராக ஜோ பிடனால் பெயர் குறிப்பிடப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கறுப்பினத் தந்தை, இந்தியத் தாய் என்ற பின்னணியோடு ஒரு பெண்மணி என்பதாலும் ஜோ பிடனுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் வாக்கு வங்கியாக கமலா திகழ்வார் என பரவலாகக் கணிக்கப்படுகிறது.
ஜோர்ஜ் புளோய்ட் விவகாரம் அமெரிக்கா முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் கறுப்பினப் பின்னணியைக் கொண்ட ஒருவரை துணையதிபர் வேட்பாளராக முன்னிறுத்துவது ஜோ பிடனின் வெற்றி வாய்ப்பைப் பன்மடங்காகப் பெருக்கும் எனக் கருதப்படுகிறது.