எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி , இரவு 8.45 மணிக்கு கோலாலம்பூர் சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை டத்தோஸ்ரீ அன்வார் ஏற்றுக்கொண்டதாகவும், டத்தோஸ்ரீ நஜிப்பிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்றும் பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகா (படம்) தெரிவித்தார்.
நடக்கப்போவது ஒரு கருத்தரங்கமே என்றும் அதில் இருதரப்பும் தத்தம் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடத் தயங்கவேண்டியதில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் ‘வன்செயல்கள் நடக்கவேண்டாம் என்றால் அரசாங்கத்தை மாற்ற வேண்டாம்’ என்ற மிரட்டல்கள் பொதுமக்களுக்கு வருவது குறித்து தமக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளதாகவும் அதனைத் தாங்கள் கவனித்து வருவதாகவும் அம்பிகா கூறினார்.
அதைப்போல், சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் ‘அமைதி வேண்டுமா? குழப்பம் வேண்டுமா? என்ற தேசிய முன்னணியின் விளம்பரப்பலகைகளை சாடிய அவர் இது போன்ற பரப்புரைகள் உடனே நிறுத்தப்படவேண்டும் எனவும், தாம் இது குறித்து போலீசில் புகார் செய்யவிருப்பதாகவும் அம்பிகா தெரிவித்தார்.