கோலாலம்பூர்,ஏப்ரல் 13 – அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பாடுபடும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் ஒரே மலேசியா கொள்கையை அறிமுகப்படுத்தியதோடு, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கும் மிக பெரிய ஆதரவினை வழங்கி வருவதாக மலேசிய தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் அட்சயகுமார் (படம்) தெரிவித்தார்.
அரசாங்கம் மலேசிய தெலுங்கு சங்கத்திற்கும் தெலுங்கு சமூகத்திற்கும் வழங்கியுள்ள ஆதரவையும், உதவிகளையும் தாங்கள் நினைவில் கொண்டுள்ளதாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் அட்சயகுமார் தெரிவித்தார்.
அனைத்துலக தெலுங்கு மாநாடு நேற்று (12.4.13) தலைநகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தொடங்கியது.
அதில் இந்தியா, மியன்மார், நியூசிலாந்து, இந்தோனேசியா, மொரிசியஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழ் நாடு ஆளுநர் டாக்டர் கே.ரோசையா உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மலேசியாவுக்கான மொரீசியஸ் தூதர் மேதகு பிரேம்நாட், உலகத் தெலுங்கு சம்மேளனத் தலைவர் ரீத்தா ரெட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த தெலுங்கு மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மலேசிய வெளியுறவு துணை அமைச்சர் செனட்டர் கோகிலன் பிள்ளை, தகவல் துறை துணையமைச்சர் செனட்டர் மெக்லீன் டென்னிஸ் டி குருஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அனைத்துலக தெலுங்கு மாநாட்டை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ அமாட் ஸஹிடி நிறைவு செய்து வைப்பார்.