Home நாடு “தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி

“தெலுங்கு மக்கள் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு” வேதமூர்த்தி

1572
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – “இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அங்கு வாழும் ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியைக் கற்க வேண்டிய ஆத்மார்த்த கடப்பாடு இருக்கிறது. ஐநா மன்றம்கூட இதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளது. எனவே, ஒருவரின் தாய்மொழிக் கல்வியை மறுதலிக்கவோ குறைகூறவோ முற்படுதல் அத்தனை பொருத்தமான செயல் இல்லை” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“அதே போல, மலேசியாவில் வாழ்கின்ற சுமார் நான்கு இலட்சம் தெலுங்கு மக்கள், 2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய சமுதாயத்தில் சிறுபான்மை சமுதாயத்தினராக இருந்தாலும், அவர்களும் தங்களின் தாய்மொழியை கற்க அனைத்து உரிமையும் உண்டு” என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் மாநாட்டில் வேதமூர்த்தி

கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 7-ஆம் நாள் ரவாங்கில் நடைபெற்ற மலேசிய தெலுங்கு சங்கத்தின் 42-வது தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தெலுங்கு சங்கத்தின் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட என்னிடம், மலேசியக் கல்வி சான்றிதழ் என்னும் எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழியும் விருப்பப்பாடமாக இடம்பெற உதவும்படி கோரிக்கை வைத்தனர். மலேசியத் தேர்வு வாரியத்தால் கடந்த 1981-இல்தான் கடைசியாக தெலுங்கு மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டதென்றும் அதன் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை என்றும் தெலுங்கு சங்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்பொழுது, இடை நிலைப் பள்ளிகளில் தேர்வுப் பாடமாக தெலுங்கு மொழியும் இடம்பெறுவதற்கான முயற்சியை மேற்கோண்டு வருவதாகவும் இதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளும் அதேவேளை, மலேசிய கல்வி அமைச்சிடமும் விண்ணப்பித்துள்ளோம் என்றும் தெலுங்கு சங்கத்தினர் விளக்கினர். எனவே, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சரான தாங்களும் இதன் தொடர்பில் உதவ வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டனர்” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் மேலும் கூறினார்.

“என்னுடைய உரையில் இதன் தொடர்பில் பதில் சொன்னபோது, பிரதமரிடமும் கல்வி அமைச்சரிடமும் ஆலோசனை செய்வதாகவும் தெலுங்கை ஒரு பாடமாக மாணவர்கள் எடுப்பதற்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தேன். இதை மையமாக வைத்துதான், தற்பொழுது சமூக ஊடகங்களில் தவறாக விமரிசனம் செய்யப்படுகிறது. என்னுடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும், இந்திய சமுதாயம் என்னும் எல்லையைக் கடந்து சபா, சரவாக் மக்கள் உட்பட அனைத்து மக்களின் தாய்மொழிக் கல்விக்காகவும் செயல்பட வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது” என்றும்  வேதமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.