Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முன்னாள் துறைமுக ஆணையத் தலைவர் கைது

கடலடி சுரங்கப்பாதை திட்டம்: பினாங்கு முன்னாள் துறைமுக ஆணையத் தலைவர் கைது

705
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராய்கிறது.

இது தொடர்பாக மேலும் பல மாநில அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த வழக்கில் எங்களுக்கு புதிய தடயங்கள் இருப்பதால், நாங்கள் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குகிறோம்.

#TamilSchoolmychoice

“விசாரணையாளர்கள் இப்போது வழக்கை இறுதி செய்வதில் உள்ளனர்.” என்று ஒரு வட்டாரம் கூறியதாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் பினாங்கு துறைமுக ஆணையத் (பிபிசி) தலைவர் ஜெப்ரி செவ் கைது செய்யப்பட்டதையும் எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

“ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட மாநில அரசாங்க சாட்சிகளையும் நாங்கள் அழைப்போம்.” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த தனது விசாரணையை எம்ஏசிசி ஒருபோதும் மூடவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

நேற்று மதியம் 2 மணியளவில் இங்குள்ள மாநில எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்ட செவ் இன்று புதன்கிழமை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.

அவர் 2018- இல் பிபிசி தலைவராக வருவதற்கு முன்பு, 52 வயதான செவ், உற்பத்தி, தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்குப் பொறுப்பான முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு உதவியாளராக இருந்தார்.

இதற்கிடையில், மூன்று எம்ஏசிசி குழுக்கள் கடந்த சில நாட்களில் கடலுக்கடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக பல நிறுவனங்களில் சோதனைகளை நடத்தியது.

இந்த நடவடிக்கையில் காவல் துறை மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியம் சம்பந்தப்பட்டிருந்தது.

விசாரணைகளை நடத்துவதற்காக மூன்று துறையினரும் கடந்த இரண்டு வாரங்களாக பினாங்கில் இருந்ததாக நம்பப்படுகிறது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோலாலம்பூரில், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை எம்ஏசிசி விசாரித்தது.

மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.

மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.

கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரை தடுத்து வைத்தது.

அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த கட்டுமானத் திட்டம் மலேசியா-சீனா கூட்டு முயற்சியாகும். இது பினாங்கின் கர்னி டிரைவை மலேசிய நிலப்பகுதியில் உள்ள பாகான் ஆஜாம் பகுதியை இணைக்கும் 7.2 கி.மீ கடலடி சுரங்கப்பாதையை கட்டும் திட்டமாகும்.