Home One Line P1 கவிஞர் உலகநாதன் மறைவு – இரங்கல்கள் குவிகின்றன

கவிஞர் உலகநாதன் மறைவு – இரங்கல்கள் குவிகின்றன

1178
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது 84-வது வயதில் பெங்களூர் நகரில் காலமான மலேசியக் கவிஞர் கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவுக்கு இரங்கல் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

“சந்தனக் கிண்ணம்” என்னும் புகழ் பெற்ற கவிதைத் தொகுப்பைப் படைத்தவர். உலகநாதன். மரபுக் கவிதையை மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் முன்னெடுத்த முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர் அவர்.

அன்னாரின் மறைவு குறித்த செய்தி முகநூல் பக்கங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றது. பலரும் அவரது மறைவு குறித்த இரங்கல் செய்திகளையும், தங்களின் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

“சந்தனக் கிண்ணம்” ஒரு வரலாற்றுப் பெட்டகம் – டான்ஸ்ரீ க.குமரன் இரங்கல்

#TamilSchoolmychoice

“தமிழ் அறிஞர் கவிஞர் உலகநாதனின் மறைவு செய்தியினை கேட்டு வருந்தினேன். பாவலர் உலகநாதனை இளமையிலேயே அறிவேன். பேராக் பாரிட் நகரைச் சேரந்தவர்.சிங்கையிலே இயக்கங்கள், இதழ்கள்வழி அருந்தொண்டாறியவர். சிங்கை செல்லும்போதெல்லாம் அவரைச்  சந்தித்ததுண்டு. பெங்களூர் சென்றபிறகு ஓரிருமுறை சந்தித்துள்ளேன். அவரது கவிதைகளைப் படித்துள்ளேன்” என முன்னாள் துணையமைச்சரான டான்ஸ்ரீ க.குமரன் (படம்) நினைவு கூர்ந்தார்.

“சமுதாய மறுமலர்ச்சியை நாடி அவர் பாடியுள்ள வரலாற்றுப் பெட்டகம் “சந்தனக் கிண்ணம்” கவிதைத் தொகுப்பாகும்” என்றும் குமரன் புகழ்ந்துரைத்தார்.

“மலேசியப் பாவலராகவே அறிமுகமாகியிருந்தார்” – இரா.திருமாவளவன்

“மலேசியப் பாவலர் ஐ. உலகநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றோம். கருநாடகம் வெங்காலூரில் வாழ்ந்த பாவலர் உடல் குன்றி இயற்கை எய்தினார். சில ஆண்டுகளுக்கு முன் வெங்காலூரில் நடைபெற்ற பொங்குதமிழ் விழாவின் வேளையில் பாவலரைச் சந்தித்ததே முதலும் இறுதியுமான சந்திப்பாகும். இந்தியாவில் வாழ்ந்தாலும் மலேசியப் பாவலராகவே அவர் அறிமுகமாகியிருந்தார். அவரின் பாநூல் மலேசிய கல்வி நற்சான்றிதழ் தேர்வில் நான் படிக்கும் வேளை பாடநூலாக இருந்தது குறிப்பிடத்தக்கது” என மலேசியத் தமிழ் ஆர்வலரும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டு வருபவருமான இரா. திருமாவளவன் (படம்) தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவன் மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவருமாவார்.