ஜோர்ஜ் டவுன்: சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய பினாங்கு முதல்வர் சௌ கோன் யோவ் மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) காலை 8.55 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ காரில் சௌ எம்ஏசிசி கட்டிடத்திற்கு வருவதைக் காணமுடிந்தது.
திங்களன்று (ஜூலை 6), மூன்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக எம்ஏசிசியில் தங்கள் அறிக்கைகளை பதிவு செய்தனர்.
மாநில வீட்டுவசதி, நகரம், நாடு திட்டமிடல் மற்றும் உள்ளாட்சி குழுத் தலைவர் ஜகதீப் சிங் தியோ, பெண்கள், குடும்ப மேம்பாடு மற்றும் பாலின உள்ளடக்கம் குழுத் தலைவர் சோங் எங் மற்றும் சமூக நலன், கவனிப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் பீ பூன் போ ஆகியோர் நேற்று விசாரிக்கப்பட்டனர்.
அண்மையில், இந்த திட்டம் குறித்து பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமியும் விசாரணைக்கு உட்படுத்தியதாகக் கூறப்பட்டது. அவரது அலுவலகத்தில் எம்ஏசிசி அதிகாரிகள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, முதலமைச்சர் சௌ கோன் யோவையும் எம்ஏசிசி விசாரிக்கும் என்று தெரிவித்த நிலையில், இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
தாம் கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபடவில்லை என்றும், இது குறித்து 2018- ஆம் ஆண்டில் எம்ஏசிசியிடம் கூறியுள்ளதாகவும் இராமசாமி குறிப்பிட்டிருந்தார்.
“அவர்கள் என்னிடம் விரிவான தகவல்களைக் கேட்டால், அது பற்றி எனக்குத் தெரியாது என்று நான் சொல்ல வேண்டியுள்ளது, இது எனது இலாகாவின் கீழ் இல்லை.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாநில ஆட்சிக்குழுவில் , மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன மேம்பாடு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பொறுப்பில் இராமசாமி உள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் சம்பந்தமாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ் கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராயத் தொடங்கியது.
2018- இல் பிபிசி தலைவராக வருவதற்கு முன்பு, 52 வயதான செவ், உற்பத்தி, தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு உதவியாளராக இருந்தார்.
இதற்கிடையில், மூன்று எம்ஏசிசி குழுக்கள் கடந்த சில நாட்களில் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக பல நிறுவனங்களில் சோதனைகளை நடத்தியது.
மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.
முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.
மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.
கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரைத் தடுத்து வைத்தது.
அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.