Home One Line P2 ஐ.உலகநாதன் மறைவு : சிங்கையிலிருந்தும் இரங்கல்

ஐ.உலகநாதன் மறைவு : சிங்கையிலிருந்தும் இரங்கல்

1493
0
SHARE
Ad

சிங்கப்பூர் – கடந்த ஜூலை 6-ஆம் தேதி இந்தியாவின் பெங்களூரு நகரில் காலமான மலேசியாவின் மூத்த கவிஞர் ஐ.உலகநாதனின் மறைவுக்கு இரங்கல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 7-ஆம் தேதி அவரது நல்லடக்கச் சடங்கு பெங்களூரிலேயே நடந்து முடிந்தது.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் உலகநாதனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

“மாதவி இலக்கிய மன்றத்தின் நிறுவனரும், மாதவி இலக்கிய இதழின் ஆசிரியரும், சிங்கை, மலேசியாவில் பல கவிஞர்களுக்கு உந்துசக்தியாக இருந்தவருமான கவிவாணர் ஐ. உலகநாதன் பெங்களூரில் காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறோம். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தது.

“சந்தனக் கிண்ணம்” தந்த மலேசியக் கவிஞர்

தனது 84-வது வயதில் காலமான ஐ. உலகநாதன் மலேசியக் கவிஞர்களில் ஒருவரான ஐ.இளவழகுவின் மூத்த சகோதரராவார்.

ஐ. உலகநாதன் படைப்புகளில் புகழ்பெற்றது அவரது கவிதைகளின் தொகுப்பு  நூலான “சந்தனக் கிண்ணம்”. பல தருணங்களில் அவர் சந்தனக் கிண்ணம் உலகநாதன் என்றே அறியப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் “கவிவாணர்” என்ற அடைமொழியே இறுதிவரை அவருக்கு நிலைத்து நின்றது. அவரது மறைவு குறித்து தமிழகத்தின் “இந்து தமிழ் திசை” இணைய ஊடகம் “மலேசியக் கவிவாணர் மறைவு” என்றே செய்தி வெளியிட்டது.

உலகநாதன் மரபுக் கவிதையை மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் முன்னெடுத்த முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.

12 செப்டம்பர் 1936-ஆம் தேதி பேராக் மாநிலத்தின் பாரிட் நகரில் பிறந்தவர் ஐ. உலகநாதன். ஐயாசாமி, சாலம்மாள் தம்பதியரின் மகனாய் பிறந்தவர், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லிங்கி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

பின்னர் பணிநிமித்தம் சிங்கப்பூர் சென்ற அவர் 1950-ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் நுழைந்தார். சிங்கப்பூரில் இருந்தபோது கவிதை இயக்கம் நடத்தி பலரும் கவிதை உலகில் நுழையத் தூண்டுகோலாக இருந்தார்.

சிங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் முரசு நாளிதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார் ஐ. உலகநாதன். மாதவி இலக்கிய மன்றத்தைத் தோற்றுவித்தார். “மாதவி” என்ற பெயரில் இதழ் ஒன்றையும் நடத்தி சிங்கை, மலேசியக் கவிதை உலகில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சினார்.

ஐ. உலகநாதனிடம் யாப்பிலக்கணம் கற்ற பல மாணவர்கள் பின்னாளில் சிறந்த கவிஞர்களாகப் பரிணமித்தனர்.

வில்லுப்பாட்டு படைத்தவர், வானொலியில் ஒலியேறிய “தமயந்தி” என்ற கவிதை நாடகத்தையும் படைத்துப் பாராட்டு பெற்றார்.

பெங்களூரில் குடியேறினார்

1968-ஆம் ஆண்டில் இந்தியாவின் பெங்களூரில் குடியேறிய உலகநாதன் அங்கு இயங்கிய திருவள்ளுவர் கலை, இலக்கிய மன்றத்தின்வழியும் மற்ற தமிழ் இயக்கங்களின் மூலமும் தமிழ்த் தொண்டாற்றினார். இலக்கியப் பயிற்சிக் களம், பாட்டுப் பட்டறை, பூங்காக் கவியரங்கம், மெட்டுகள் ஒட்டிக் கொள்ளும் பாடல் புனையும் பயிற்சி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் வழி தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து வந்தார்.

1985-இல் தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. “திருப்பம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை ஐந்து ஆண்டுகள் நடத்தியிருக்கிறார்.

உலகநாதனின் புகழ் பரப்பிய “சந்தனக் கிண்ணம்”

இவரது முதல் நூலான “சந்தனக் கிண்ணம்” 1966-இல் வெளியீடு கண்டது. மலேசியத் தமிழ்க் கவிதைகளின் சிறப்புகளுக்காக தமிழ் நாட்டில் மதிப்பு ஏற்பட இந்நூல் காரணமாக அமைந்தது.

இந்நூல் குறித்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தனது “தம்பிக்கு” என எழுதும் மடல்களில் ஒன்றில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

“சமுதாய மறுமலர்ச்சியை நாடி அவர் பாடியுள்ள வரலாற்றுப் பெட்டகம் “சந்தனக் கிண்ணம்” கவிதைத் தொகுப்பாகும்” என்று முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன் தனது இரங்கல் செய்தியில் புகழ்ந்துரைத்தார்.

பல நூல்களை எழுதியிருப்பதோடு, திருக்குறள் காமத்துப் பாலுக்கு வெண்பா வடிவிலேயே விளக்கம் எழுதியுள்ளார் ஐ.உலகநாதன்.

ஐ.உலகநாதனின் கைவண்ணத்தில் வெளியான நூல்களின் பட்டியல் பின்வருமாறு :

நூலின் தலைப்பு

சந்தனக் கிண்ணம்

சிங்கப்பூர் சிறப்பதிகாரம்

மகரயாழ்

உடைந்த வீணை (குறுங்காவியம்)

கேட்டால் கேளுங்கள்

திருப்புமுனைகள்

சிவகாவியம்

தமயந்தி (நாடகப் பாவியம்)

பாவாணர் புகழ்ச்சிந்து

முத்துக்கோவை

புரட்சித் தலைவர் புகழ் அந்தாதி

செந்தமிழ்க் கவசம்

பாவாணர் புகழ்ச் சிந்து

கண்ணம்மா (குறுங்காவியம்)

ஐ.உலகநாதன் கட்டுரைத் தொகுப்பு

நான் நூறு (சுய வரலாறு)

ஒரு பாலைவன ஒட்டகத்தின் சோலைவனப் பயணம் (பயணக் கட்டுரை)

மேற்கண்ட அவரது நூல்களில், “சந்தனக் கிண்ணம்” உள்ளிட்ட சிலவற்றைளை கீழ்க்காணும் இணைய இணைப்பிலும், சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் இணையத் தளத்திலும் மின்னூல் வடிவில் படித்து மகிழலாம் :

http://kavimaalai.com/2018/04/kavignar-i-ulaganathan/

-செல்லியல் தொகுப்பு