ஜோர்ஜ் டவுன் : பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி ஆட்சியில் இந்து ஆலயங்களின் உடைப்புகள் தொடர்கதையாகி வருகின்றன என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் அலோர்ஸ்டார் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் அரசு அதிகாரிகளால் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சுமார் 200 அலோர்ஸ்டார் மாநகரசபை அதிகாரிகள், காவல் துறையினர் கூடி நின்று அந்த ஆலயத்தை உடைத்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆலய உடைப்பு விவகாரம் குறித்து தொடக்கம் முதல் அறிக்கைகள் விடுத்து தற்காத்து வந்திருக்கிறார் இராமசாமி.
ஆலய உடைப்பு குறித்து மாநில மந்திரி பெசார் விளக்கம் தர வேண்டும் என்ற அறைகூவல்கள் விடுக்கப்பட்டு வருவது இராமசாமி கருத்துரைத்தார். ஆலய உடைப்புக்குப் பின்னணியில் மாநில அரசாங்கமே செயல்பட்டிருக்கும்போது மந்திரி பெசார் எப்படி விளக்கம் தர முடியும் என தனது முகநூல் பக்கத்தில் இராமசாமி கேள்வி எழுப்பினார்.
பல இன, பல மத மலேசியாவில் இவ்வாறு இந்து ஆலயம் உடைக்கப்படுவதும் அதுவும் அதிகாலையில் இரகசியமான முறையில் உடைக்கப்படுவதும் ஏன் என்றும் அவர் சாடினார்.
“பல முறையீடுகள் செய்யப்பட்டும் அதிகாலையில் மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டிருக்கிறது. தேசியக் கூட்டணி ஆட்சியில் சில மாதங்களில் உடைக்கப்படும் இரண்டாவது இந்து ஆலயம் இது” என்றும் இராமசாமி சுட்டிக் காட்டினார்.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தைப்பிங், கமுந்திங்கிலுள்ள இந்து ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டது என்பதையும் இராமசாமி சுட்டிக் காட்டினார்.
ஆலய உடைப்பை நிறுத்த, அதன் நிர்வாகம் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது அதற்கான முடிவு தெரியும் முன்னரே அதிகாலையில் இந்த ஆலயம் உடைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் இராமசாமி கண்டித்தார்.
“அரசுப் பணிகள் பகலில் மேற்கொள்ளப்படும்போது, மாநகர் மன்றத்தின் ஆலய உடைப்பு மட்டும் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டது ஏன்? இது மத தீவிரவாதத்தையும், உள்நோக்கத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது” என்றும் இராமசாமி கூறினார்.
பாஸ் தலைமையிலான அரசாங்கத்தில் கெடா மாநிலத்தில் பல இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கமான சூழ்நிலைக்கு எதிர்காலத்தில் அபாயங்கள் ஏற்படும் என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் இராமசாமி எச்சரித்தார்.
கெடா மாநிலத்திலுள்ள தனியார் அல்லது அரசாங்க நிலங்களில் அமைந்துள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் ஏற்படும் என்ற தகவல்களைத் தான் பெற்றிருப்பதாகவும் இராமசாமி தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம்
ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் சிறிய ஆலயம்தான். எனினும் 100 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் வாய்ந்தது. அலோர்ஸ்டாரின் இரயில் நிலையத்தின் அருகில் ஜாலான் கெரெத்தா அப்பி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
அலோர்ஸ்டாரில் இரயில்வே துறையில் பணியாற்றிய இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இதுவாகும்.
ஆலயம் உடைக்கப்படுவதற்கு முன்னர் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது என கெடா மந்திரி பெசாரின் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி குமரேசன் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தாங்கள் ஆறுமாத கால அவகாசம் கேட்டதாகவும், நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்த வேளையில் பின்னிரவில் அதிகாரிகள் ஆலயத்தை உடைத்திருப்பதாகவும் ஆலயத் தலைவர் விஜய்மோகன் சந்திரசேகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.