கோலாலம்பூர்: முகமட் அடிப் முகமட் காசிமின் கொலை வழக்கின் மரண விசாரணையின் முன்னேற்றத்திற்காக பல தரப்பினர் காத்திருக்கையில், முக்கியமான சாட்சி ஒருவர் அவரது சாட்சியத்தை மாற்றியுள்ளதாக காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சாட்சியை மீண்டும் விசாரித்தபோது தகவல்கள் மாற்றப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உறுப்பினர் மரணம் தொடர்பான காவல் துறை விசாரணை குறித்த புதுப்பிப்புகளை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் வழங்கினார்.
2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி அன்று சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஒரு கலவரத்தைக் கண்டதாக ஷா அலாம் நீதிமன்றத்தில் முன்னர் கூறிய என்.சுரேஷ் தற்போது சாட்சியத்தை மாற்றி உள்ளதாக ஹுசிர் குறிப்பிட்டார்.
மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி ஏமாற்றினால் ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, “துணை அரசு வழக்கறிஞருக்கு அவர் அளித்த சாட்சியத்தை முரண்பாடாக இருக்கிறதா என்று திரும்பக் கொண்டு வருவோம். துணை அரசு வழக்கறிஞர் தீர்மானிக்கட்டும்.” என்று அவர் கூறினார்.
இருப்பினும், விசாரணையின் போது சாட்சி கூறியது குறித்து பிற தகவல்களை ஹுசிர் வெளியிடவில்லை.
முன்னதாக, 52 புதிய சாட்சிகளைத் தவிர, விசாரணையில் சாட்சியமளித்த 30 சாட்சிகளையும் காவல் துறை திரும்ப அழைத்ததாக அப்துல் ஹாமிட் கூறினார்.
எவ்வாறாயினும், கலவரத்தில் அடிப் தாக்கப்பட்டதை அவர்கள் யாரும் பார்த்ததாக காவல் துறையில் கூறவில்லை.