கோலாலம்பூர்: அல்ஜசீரா தயாரித்த ஆவணப்படம் தொடர்பான விசாரணையில், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டால் தங்களைத் தற்காத்துக் கொள்ள அச்செய்தி நிலையத்திற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
“இப்போதைக்கு ஆறு பேர் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அழைக்கப்பட்டுள்ளர். மேலும், ஏழாவதாக காணொளியைப் பதிவேற்றியவர் விரைவில் வருவார்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, மக்கள் அவர்கள் மீது சீற்றம் கொண்டு கருத்துகளைப் பதிவிட்டு வருவது குறித்து வினவிய போது, மக்கள் அமைதிக் காக்க வேண்டும் என்றும், காவல் துறை அல்ஜசீரா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும், செய்தி நிறுவனத்தால் பேட்டி காணப்பட்ட வங்காளதேச நபர் காணாமல் போயுள்ளார் என்று அப்துல் ஹாமிட் மேலும் தெரிவித்தார்.
“தயவுசெய்து முன் வாருங்கள். புலம்பெயர்ந்தோர்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்று நீங்கள் கூறியதன் அர்த்தத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துகிறேன், ” என்று அவர் கூறினார்.
புக்கிட் அமான் தலைமையகத்திற்கு நேற்று காலை 9 மணிக்கு வாக்குமூலம் அளிக்க வந்த அவர்கள் அறுவரும் மாலை 3 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டனர்.
காவல் துறை விசாரணைக்கு தனது கட்சிக்காரர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று அவர்களின் வழக்கறிஞர் ஹிஸ்யம் தெஹ் போ டீக் கூறினார்.
“சித்தரிக்கப்பட்டுள்ள ஆவணப்படம் சீரானதாகவும், நியாயமானதாகவும் இருந்தது. இது வெவ்வேறு தரப்புகளிலிருந்து கருத்துகளைப் பதிவு செய்துள்ளது.
“உண்மையில், அரசாங்கத்தின் பதிலைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இன்னும் பதில்கள் வரவில்லை.
“இருந்தாலும், அரசாங்க வெளியீடுகளிலிருந்து காட்சிகள் பயன்படுத்தப்பட்டு ஆவணப்படத்தில் வைக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அடுத்து மலேசிய அதிகாரிகளால் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தவறாக நடத்தப்பட்டதை சித்தரிக்கும் ‘101 ஈஸ்ட்’ ஆவணப்படத்தின் அறிக்கை குறித்து விளக்கமளிக்க ஆறு அல் ஜசீரா ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நாட்டில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட கொவிட்19 பாதிப்பைக் கையாளும் வகை, மலேசியாவை இழிவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து அல்ஜசீரா மீது காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியது.
அல்ஜசீரா நிர்வாகம் வியாழக்கிழமை சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை தற்காத்து, ஆவணப்படத்திற்கு எதிர்வினையைத் தொடர்ந்து அதன் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இடையூறு குறித்து கவலை தெரிவித்திருந்தது.
கொவிட் 19 நடவடிக்கையை மலேசியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததால், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சேவை செய்வதில் பாகுபாடு காட்டுவதாக 20.25 நிமிடங்கள் கொண்ட ‘லோக்ட் ஆப் இன் மலேசியாஸ் லோக்டவுன்’ என்ற காணொளி அறிக்கையில் அல்ஜசீரா கூறியது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அதிகாரிகள் வெளிநாட்டினரைக் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.