கோலாலம்பூர்: முன்னாள் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை.
இது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தலைவர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
“இல்லை” என்று அவர் வாட்சாப் மூலம் மலேசியாகினி செய்தி தளத்திற்குத் தெரிவித்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் சைட் சாதிக்கின் உதவியாளர் லோக்மான் லோங் கூறுகையில், வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் காலை 10 மணிக்கு எம்ஏசிசிக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.
காணாமல் போனதாகக் கூறிய 250,000 ரிங்கிட் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அங்கு சென்றிருந்ததாக லோக்மான் கூறினார்.
” ஆமாம், காலையில் அவர் எம்ஏசிசி சென்றிருந்தார். அவர் வீட்டில் காணாமல் போன பணம் குறித்து வாக்குமூலம் அளிக்க அழைத்துள்ளனர். ” என்று அவர் கூறினார்.
நேற்று நாடாளுமன்ற அமர்வை இடையிலேயே விட்டுவிட்டு சைட் சாதிக் எம்ஏசிசி தலைமையகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை அவரது உதவியாளர் நிராகரித்தார்.
“உண்மை இல்லை இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கைது ஏதும் செய்யப்படவில்லை” என்று அவர் கூறினார்.
எம்ஏசிசி நேர்மையான முறையில் கேள்விகளை கேட்டு, முறையாக நடத்தி வருவதாக அவர் கூறினார்.
கடந்த மார்ச் 25-ஆம் தேதி தமது வீட்டில் இருந்த 250,000 ரிங்கிட் காணாமல் போனதாக சைட் சாதிக் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.