கோலாலம்பூர்: மக்களவையில் பார்வையாளர்கள் கூடத்தில் அமர்த்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற மையக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கூடல் இடைவெளி காரணமாக அவர்கள் அங்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.
பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹசன் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன், சபாநாயகர் டத்தோ அசார் அசிசான் ஹருணுடனும் கலந்துரையாடியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மக்களவையின் துணை சபாநாயகர் டத்தோ முகமட் ராஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார்.
அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பகுதியில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது பார்வையாளர்கள் கூட்டத்தில் இருப்பார்கள் என்று ராஷீட் கூறினார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வின் போது, சபாநாயகரின் பார்வையில் இல்லாதது குறித்து தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.
“அமர்ந்திருக்கும் போது விவாதிக்க, கேள்விகளைக் கேட்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண சபாநாயகர் கவனத்தில் எடுத்துக் கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்படுகிறது.
“இது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு ஏற்பவும் உள்ளது,” என்று அவர் கூறினார்.
தற்போது, 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 பேர் மட்டுமே மையக் கூடத்தில் அமர்ந்துள்ளனர். மீதமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் கூடம், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான இடத்தில் உட்கார்ந்துள்ளனர்.