Home One Line P2 தென்சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்கள் போர் ஒத்திகை

தென்சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்கள் போர் ஒத்திகை

1120
0
SHARE
Ad

ஹாங்காங் : பல நாடுகளுக்கிடையில் இழுபறிப் போட்டியில் சிக்கியிருப்பது தென் சீனக் கடல் தீவுகள் பகுதி. அங்கு அமெரிக்கா தன் பலத்தை சீனாவுக்கு எதிராகக் காட்டத் தொடங்கியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் அமெரிக்க கடற்படையின் இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்கள் இந்தப் பகுதியில் நங்கூரமிட்டிருக்கின்றன. போர் ஒத்திகைப் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றன.

இதுபோன்று இரண்டு போர்க்கப்பல்கள் இணைந்து போர் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்வது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.

#TamilSchoolmychoice

வெகு அபூர்வமாகவே அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் இணைந்து போர் ஒத்திகை நிகழ்த்தும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் போர்க்கப்பல்

யுஎஸ்எஸ் ரோனால்ட் ரீகன், யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Ronald and USS Nimitz) என்ற பெயர் கொண்டவை இந்த இரண்டு விமானந்தாக்கிக் கப்பல்களாகும்.

பசிபிக் கடல்பகுதிக்கான அமெரிக்கக் கடற்படை இந்தத் தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

இந்த இரண்டு போர்க்கப்பல்களுடன் 120 போர் விமானங்கள் பயிற்சிகளில் ஈடுபட்டன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும் இந்தப் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இவர்களோடு பாதுகாப்புப் படகுகள், ஆயுதங்களை அழிக்கும் வல்லமை கொண்ட சக்தி வாய்ந்த போர்க்கருவிகளும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

போர் வந்தால் துல்லியத் தாக்குதல்களை நடத்துவது, போருக்கான தயார் நிலை, திறன்களைப் பரிசோதனை செய்வது போன்ற அம்சங்களில் இந்த இரு கப்பல்களின் போர் ஒத்திகை கவனம் செலுத்தியது.

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் போர்க்கப்பல்

தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கவும், மிரட்டலைச் சமாளிக்கவும் அமெரிக்கா எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது

காரணம், 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் ஒருங்கிணைந்து ஒத்திகை பார்ப்பது இதுவே முதன் முறையாகும். 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய போர் ஒத்திகையை இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இணைந்து மேற்கொள்கின்றன.

தென் சீனக் கடல் பகுதியின் 1.3 மில்லியன் சதுரமைல் அளவுள்ள வட்டாரத்தை தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியாகக் கூறிக் கொள்ளும் சீனா அமெரிக்க போர்க்கப்பல்களின் வருகைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

அமெரிக்காவின் நடவடிக்கை நாடுகளுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகிறது; தென்சீனக் கடல் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது; அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைக்கிறது; என சீனா சாடியது.