Home One Line P2 கந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்

கந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்

198
0
SHARE

சென்னை – கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒரு குழு “கந்தர் சஷ்டிக் கவசம்” பாடலின் வரிகளைக் கொச்சைப்படுத்தி வெளியிடப்பட்ட காணொளி தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காணொளியில் ஆபாசமான முறையில் முருகப் பெருமானையும், முருக பக்தர்கள் புனிதமாகக் கருதிப் போற்றும் கந்தர் சஷ்டிக் கவசம் பாடலின் வரிகளையும் விமர்சித்திருந்தார் சுரேந்தர் நடராஜன் என்பவர்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தமிழகக் காவல் துறை சுரேந்தர் நடராஜனையும் கறுப்பர் கூட்டம் யூடியூப் தளத்தின் நிர்வாகி செந்தில் வாசன் என்பவரையும் கைது செய்ததோடு அவர்களின் அலுவலகத்தையும் மூடியது.

அந்த சர்ச்சைகக்குரிய யூடியூப் தளத்தை தடை செய்வதற்கும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தக் கறுப்பர் கூட்டம் செயல்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் இதனால் திமுக இந்து விரோதக் கட்சியாகச் செயல்படுகிறது என்றும் பாஜகவும் இணையவாசிகளும் குற்றம் சுமத்தினர்.

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி திமுகவைத் தற்காத்து அறிக்கை விட்டார். டி.கே.எஸ்.இளங்கோவனும் திமுக இந்து விரோதக் கட்சியல்ல என்று வாதிட்டார்.

ஆனாலும், ஸ்டாலின் ஏன் பதில் சொல்லவில்லை என அனைத்துத் தரப்புகளும் வறுத்தெடுத்ததன் விளைவாக இன்று அறிக்கை ஒன்றை ஸ்டாலின் விடுத்தார்.

“சமூக நீதி, சுயமரியாதைக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதே திமுகவின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் வெறுப்பு கிடையாது. எவரது நம்பிக்கையிலும், பழக்கவழக்கங்களிலும் குறுக்கிடுவதில்லை. திருவாரூர் கோவில் தேரோட்டம், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் தூர்வாருதல் தொடங்கி கவனிப்பாரற்று இருந்த கோவில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடத்திட வழிவகுத்தது தலைவர் கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சி” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

திமுகவை இந்து விரோதி என்ற அரதப் பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார். ஆனால் பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்டவர்களின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக சட்டப் போராட்டம் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

“சேற்றில் எழுந்த பன்றி உடலைச் சிலுப்புகிறதே என ஆற்றில் நீராடிய நாமும் சிலுப்பக் கூடாது. சமூக வலைத்தள வலைகளில் சிக்கி நேரத்தை வீணடித்திட வேண்டியதில்லை. தலைமைக் கழகம் கவனித்துக் கொள்ளும்.திசை திருப்பும் நாடகங்களில் மயங்காது, அவற்றைப் புறந்தள்ளி ஜனநாயகக் களத்தில் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் வகையில் அயராது உழைத்திடுவோம்” என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

எனினும் சர்ச்சையின் மையப் புள்ளியான கறுப்பர் கூட்டம் தெரிவித்த கந்தர் சஷ்டி மீதான கொச்சைக் கருத்துகளுக்கு ஸ்டாலின் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதுவும் இன்று மீண்டும் சர்ச்சையானது.

இதற்கிடையில் 144 தடை உத்தரவை மீறி, கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக, நீதிமன்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன் உள்ளிட்ட 250 பேர் மீது தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Comments