ஷா அலாம்: மாநிலத்தில் கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தப்படுவதை சிலாங்கூர் அரசு மதிப்பாய்வு செய்யும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜூன் 10 அன்று அமல்படுத்தப்பட்டதிலிருந்து பலர் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கவில்லை எனத் தோன்றியதால் இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறினார்.
“இந்த விஷயம் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்தேன். அதனால்தான் புதிய நடைமுறைகளுக்கு கட்டுப்படுமாறு மக்களை நான் அடிக்கடி நினைவுபடுத்துகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்துரைப்பதற்கு முன்னர் பிரதமர் தலைமையில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு மன்றம் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அமிருடின் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநிலத்தில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட தொடர்பு தடமறிதலுக்கான இயங்கலை அமைப்பான ‘செலாங்கா’ முயற்சியை மாநில அரசு புதுப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
“மக்கள் எப்போதும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுடன் இணக்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்காத அல்லது வருகையாளர்களுக்கு கிருமித்தூய்மி வழங்குவதில் தோல்வியுற்ற வளாகங்கள் இருந்தால் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யலாம்” என்று அவர் கூறினார்.